Tamilnadu

மகனுக்காக பட்டத்தை பெற்ற பெற்றோர்கள்.. உயிரிழந்த கல்லூரி மாணவருக்காக நிர்வாகம் செய்த நெகிழ்ச்சி செயல் !

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் கண்ணன்- செல்வி தம்பதியினரின் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தினேஷ் என்ற மகன் இருந்தார். தினேஷை அவரது பெற்றோர் கஷ்டப்பட்டு ஒரு பட்டதாரியாக்க வேண்டும் என்று ஆசையாக அவரை தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தனர்.

அதன்படி தினேஷும் அங்கே கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் சேர்ந்து படித்தார். நன்றாக படிக்க கூடிய இந்த மாணவர், கடந்த 2021-ம் ஆண்டு இறுதியாண்டு முடிக்க வேண்டியதாக இருந்தது. அப்போது தனது இறுதியாண்டு தேர்வை எழுதி ரிசல்ட் வருகைக்காக காத்திருந்தார் தினேஷ். ஆனால் இதனிடையே தான் வீட்டில் சும்மா இருக்க வேண்டாம் என்று நினைத்த தினேஷ், மீனவர்களுடன் சேர்ந்து மீன் பிடிக்க சென்று வந்துள்ளார்.

இந்த சூழலில் ஒரு நாள் தினேஷ் மீன்பிடிக்க கடலுக்கு சென்றபோது திடீரென படகு கவிழ்ந்ததில் தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இளம் வயதில் தங்கள் மகன் உயிரிழந்ததை எண்ணி, பெற்றோர் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்தனர். இதனிடையே மாணவர் தினேஷ், தான் எழுதிய அனைத்து படங்களிலும் தேர்ச்சி பெற்று பொறியியல் பட்டதாரியானார்.

ஆனால் இந்த மகிழ்ச்சியை கொண்டாட மகன் இல்லையே என்று பெற்றோர் மிகுந்த வேதனையில் இருந்து வந்தனர். மாணவர் தினேஷ் தேர்ச்சி பெற்றிருந்தாலும் கொரோனா காரணமாக பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருந்தது. இதனால் அந்த கல்லூரியில் படித்த அனைத்து மாணவர்களும் பட்டமளிப்பு விழாவுக்கு காத்திருந்தனர்.

இந்த நிலையில் தினேஷ் படித்த தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு நடைபெற்றது. இந்த விழாவில் 1933 இளங்கலை மற்றும் முதுகலை கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அப்போது தினேஷ் வாங்கிய பட்டத்தை பெற அவரது பெற்றோர்களான கண்ணன், செல்வி ஆகியோர் சென்றிருந்தனர். அங்கே அனைத்து மாணவர்களும் தங்கள் பெற்றோரை கூட்டி வந்ததை கண்ட தாய், கீழே நாற்காலியில் அமர்ந்திருந்தபோது கண்கலங்கி காணப்பட்டார்.

தொடர்ந்து மாணவர் தினேஷின் பெயரை மேடையில் வாசித்ததுமே பெற்றோர் கண்ணீருடன் மேடையேறி பட்டத்தை பெற்றுக்கொண்டனர். அப்போது மறைந்த தினேஷுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அங்கிருந்த சக மாணவர்களும் மேடையில் இருந்த ஆசிரியர்களும் கரகோசம் எழுப்பினர்.

மேலும் தங்கள் மகனின் பட்டத்தை வைத்திருப்பது தங்கள் மகனே தங்களுடன் இருப்பதாக எண்ணுவதாக பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.

Also Read: மோடி மீது வீசப்பட்ட செல்போன்... சிக்கிய பாஜக தொண்டர்.. கைகாட்டும்போது தவறி வீசியதாக போலிஸார் விளக்கம் !