Tamilnadu

“கலைஞரின் கரங்களை பிடித்து சொன்னார்..” : காயிதே மில்லத் சொன்னதை நினைவு கூர்ந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

ரமலான் பெருநாள் விழாவை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் இஸ்லாமிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாரிமுனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டார்.

அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமை வகித்த இந்த நிகழ்ச்சியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், வெற்றி அழகன், சென்னை மாநகர மேயர் பிரியா, பேராசிரியர் அப்துல் காதர் உள்ளிட்டோரும், தி.மு.க நிர்வாகிகளும் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்களும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "நான் இருக்கும் சென்னை மேற்கு மாவட்டத்திற்கு அடுத்தபடியாக சென்னை கிழக்கு மாவட்டத்தில் தான் அதிக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன். அதற்கு வாய்ப்பளிக்கும் மாவட்டச் செயலாளருக்கும் மாவட்டக் கழகத்துக்கும் நன்றிகள்.

கடந்த வாரம் முதல் தொடர்ச்சியாக ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறேன். என்னுடைய தொகுதியில் என் சார்பில் 20 ஆயிரம் இஸ்லாமிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது உட்பட தொடர்ந்து, ரமலான் திருநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன்.

இதையெல்லாம் பார்க்கும்போது, மற்ற இயக்கங்களுக்கும் தி.மு.கவுக்கும் இருக்கும் வித்தியாசம் உங்களுக்கே புரியும். தேர்தல் நடக்க இருப்பதால் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யும் இயக்கமல்ல தி.மு.க. வருடம் முழுவதும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம். எப்போதுமே மக்களுடன் இருக்கும் இயக்கம். குறிப்பாக இசுலாமிய மக்களுடன் நெருக்கமாக இருக்கும் இயக்கம்.

கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் காலத்தில் இருந்து, தி.மு.க எப்போதுமே இஸ்லாமிய மக்களுக்கு துணையாக நின்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வது என்னுடைய குடும்ப விழாவில் கலந்து கொள்ளும் உணர்வை தருகிறது.

நம்முடைய தமிழ்நாடு என்பது திராவிட இயக்கத்தால் பண்படுத்தப்பட்ட மண். இஸ்லாமிய மக்களுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் அவர்களுக்காக குரல் கொடுத்து களத்திற்கு வருவது தி.மு.க தான். அதனால் தான் சங்கிகள் கூட்டமெல்லாம் நம்முடைய தலைவரை பார்த்து பயப்படுகின்றனர். அதனால் "கலைஞரை விட ஸ்டாலின் ஆபத்தனாவர்" என்ற பாராட்டை நம்முடைய முதலமைச்சர் பெற்றுள்ளார்.

எதற்கெடுத்தாலும் நாட்டைவிட்டு போ... பாகிஸ்தான் போ... ஆப்கானிஸ்தான் போ என சொல்பவர்களை நாம் மக்களவைத் தேர்தலில் தோற்கடித்துள்ளோம். அதேபோல ஒரே நாடு ஒரே மொழி உள்ளிட்ட ஒற்றை அடையாளத்திற்குள் நம்மையெல்லாம் அடைக்க நினைக்கும் பாசிச சக்திகளை வரும் 2024 தேர்தலில் அடியோடு விரட்டி அடிப்போம்.

1972ஆம் ஆண்டு காயிதே மில்லத் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நேரத்தில் கலைஞர் அவர்கள் நேரில் சென்று பார்த்தார். அப்போது காயிதே மில்லத் அவர்கள் கலைஞரின் கரங்களை பிடித்துக் கொண்டு சொன்னார், 'அய்யா நீங்கள் இஸ்லாமிய மக்களுக்கு செய்ததை போல வேறு யாரும் செய்யவில்லை' என்று. அந்த அளவுக்கு இஸ்லாமிய மக்களுடன் தி.மு.க பக்கபலமாக இருந்து இன்றும் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.

நான் பல நேரங்களில் கைதாகி இருந்தாலும், இஸ்லாமியர்களுக்கு எதிரான சி.சி. ஏசட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தின்போது கைதானது தான் முதல் கைது. தான் பெருமைக்குரியதாக பார்க்கிறேன். மேலும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சியில் இஸ்லாமிய மக்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் குறித்தும், தற்போது நடைபெறும் தி.மு.க ஆட்சியில் செய்யப்படும் திட்டங்கள் குறித்தும் பேசினார்.

"சிறுபான்மையினர் நலனில் அக்கறை காட்டாத அரசு கடந்த காலத்தில் அதிமுக அரசு. அதனால் தான் சிறுபான்மையினர் நல வாரியத்தை செயல்பாட்டில் வைக்காமல் இருந்தது. ஆனால் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அந்த ஆணையத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமித்து செயல்பட வைத்துள்ளார்" என்றார்.

இதனைத் தொடர்ந்து, 2 ஆயிரம் இஸ்லாமிய குடும்பங்களுக்கு ரமலான் பெருநாள் பிரியாணி விருந்து தயாரிக்க தேவையான பொருட்கள் மற்றும் புத்தாடைகளை வழங்குவதை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Also Read: “தண்டவாளத்தில் தலைவன் தலை.. ரத்தத்தில் கல்லக்குடி பெயர்”: மெய்சிலிர்க்க வைக்கும் கலைஞரின் போராட்ட வரலாறு!