Tamilnadu
ஆருத்ரா மோசடி : தடை விதிக்க சம்மன் அனுப்பிய நடிகர் ஆர்.கே.சுரேஷ்.. நிராகரித்த உயர்நீதிமன்றம் !
சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலிசார் நடத்திய விசாரணையில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஒபிசி பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பிருப்பதாக தகவலை பெற்றது. அதனடிப்படையில் போலிஸ் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி ஆர்.கே.சுரேசுக்கு பொருளாதார குற்றப்பிரிவு சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், பட தயாரிப்பு தொடர்பாகவே ரூசோ தம்மை அணுகியதாகவும், அது தொடர்பாக மட்டுமே பண பரிவர்த்தனை நடந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தான் இப்போது தனது மனைவி மற்றும் குழந்தையை கவனித்து கொள்வதற்காக வெளிநாட்டில் இருப்பதால், விசாரணைக்கு நேரடியாக ஆஜராக இயலாது எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஆர்.கே.சுரேஷ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆஜராகி, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த விவகாரத்தில் ஆர்.கே.சுரேஷ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், ஆர்.கே.சுரேஷுக்கும் ஆருத்ரா நிறுவனத்தின் மோசடிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என வாதிட்டார்.
அப்போது நீதிபதி, ஆவணங்களுடன் ஆஜராகும்படி அனுப்பப்பட்டுள்ள சம்மனில், எந்த மாதிரியான ஆவணங்கள் போன்ற விவரங்கள் இல்லை என்பதால் சம்மனை ரத்து செய்யப் போவதாகவும், வேண்டுமானால் தேவையான விவரங்களுடன் புதிய சம்மனை அனுப்பும்படியும் காவல்துறையிடம் தெரிவித்தார்.
காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, சம்மனை ரத்து செய்ய வேண்டாம் எனவும், இந்த சம்மன் அனுப்பபட்டது குறித்து விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். அப்போது, காவல்துறை பதிலளிக்கும்வரை சம்மனுக்கு தடை விதிக்க வேண்டுமென ஆர்.கே.சுரேஷ் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, காவல்துறை பதிலளிக்க அவகாசம் வழங்கி வழக்கை ஏப்ரல் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!