Tamilnadu

மதிப்பெண் குறைந்துவிடுமோ என்ற அச்சம்.. தேர்வு எழுதாமலேயே 10ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு!

சென்னை அடுத்த மணலி ஹரிகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த ரவிசங்கர். இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மகள் ராஜஸ்ரீ மணலி பாடசாலை தெருவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து வருகிறது. இதனால் மாணவி பொதுத் தேர்வு எழுதி வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று கணித தேர்வு நடைபெறுகிறது. இதனால் நேற்று மகளிடம் கணித தேர்வுக்கு நன்றாகப் படிக்கும் படி சொல்லி விட்டுப் பெற்றோர்கள் வெளியே சென்றுள்ளார். இதையடுத்து கணித தேர்வுக்குப் பயந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாததால் உடலில் மண்எண்ணையை ஊற்றித் தீவைத்துக் கொண்டார்.

இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து அவரை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்குச் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். போலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கணித தேர்வுக்குப் பயந்து மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. கணித தேர்வுக்குப் பயந்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: காவல்துறையின் பெயரில் போலி முகநூல் பக்கம்: தவறான தகவல்களை பரப்பிய நபர் அதிரடி கைது - போலிஸார் நடவடிக்கை !