Tamilnadu

2 தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகளுக்கு சிக்கல்: ஆருத்ரா வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கிய போலிஸ்!

தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் பேரிடம் 25 முதல் 30 சதவீதம் வட்டி தருவதாக கூறி 2438 கோடி ரூபாயை ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி செய்தது. இந்த வழக்கில் தற்போது பா.ஜ.கவின் விளையாட்டுப் பிரிவு மாநில செயலாளர் ஹரிஷ் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்துனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஹரிஷ் எந்தவித சொந்த வருமானமும் அவருடைய பெயரில் இல்லாத நிலையில், பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவருடைய சொத்து மற்றும் வங்கி கணக்குகளை ஏற்கனவே பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் முடக்கி உள்ளனர்.

அந்த நிறுவனத்தின் மற்றொரு பெண் இயக்குனரான மாலதி என்பவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான ரூசோ என்பவரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்தனர்.

அவரிடமும் ஹரிஷிடமும் விசாரணை நடத்தியதில், இந்த மோசடி வழக்கில் நடிகரும், பாஜக கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து ஆர்.கே.சுரேஷ் வீட்டுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

வழக்கை ஒன்றிய அரசின் மூலம் இல்லாமல் செய்வதற்காக ரூ.12 கோடி கொடுத்துள்ளார். அந்தப் பணத்தின் மூலம் அதிகாரிகளிடம் பேச முயற்சி செய்து தோல்வி அடைந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் ஆர்.கே.சுரேஷ் பணத்தை திருப்பி ஒப்படைக்க வில்லை என ரூசோ விசாரணையின் போது வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஆருத்ரா மோசடி வழக்கை போலிஸார் விசாரிக்க தொடங்கியதுமே ஆர்.கே.சுரேஷ் சுற்றுலாவுக்காக துபாய் சென்றுள்ளார். ஆனால் வழக்கில் இருந்து தப்பிக்க அங்கேயே தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், அவரை .சென்னை அழைத்து விசாரணை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் தீவிர முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த மோசடி வழக்கில், லட்ச கணக்கான மக்களிடம் ரூ.2438 கோடி பணத்தை ஏமாற்றியுள்ளனர். இது தொடர்பாக 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அதில் 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் எஞ்சிய 5 பேர் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களை கண்டு பிடித்து கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான பத்திரிகை செய்தியில், "ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு சம்பந்தமாக 6 கம்பெனிகள் மற்றும் 16 எதிரிகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். அவர்களில் 11 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதில் ஹரீஸ் என்பவர் வழக்கின் முக்கிய எதிரி ஆவார்.

harish

ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான காஞ்சிபுரம் ஹரிஷ் 23.03.2023 அன்று கைது செய்யப்பட்டு 24.03.2023அன்று நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் 28.03.2023-லிருந்து 07.04.2023 வரை 11 நாட்கள் போலிப் கஸ்டடி எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். விசாரணையில் ஹரில் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 84 கோடி டெபாசிட் ஆருத்ரா நிறுவனத்திற்கு பெறப்பட்டுள்ளதும், ஆனால் அவருக்கு சுமார் 130 கோடி ஆருத்ரா நிறுவனத்திலிருந்து தரப்பட்டுள்ளதும் தெரியவந்தது.

இதுகுறித்து விசாரித்தபோது காஞ்சிபுரம் ஹரீஸ் தன் பெயரிலும், உறவினர்கள் பெயரிலும் சுமார் 15 கோடி மதிப்புள்ள சொத்துகள் வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றும் சில நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதும் தானே One Man Groups என்ற பெயரில் தொழில்கள் தொடங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது. அவர் பயன்படுத்திய கார், மொபைல்போன் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் அவர் பதுங்கியிருந்த வீடு சோதனை செய்யப்பட்டு சொத்து ஆவணங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. எதிரி ஹரீஸ் ஆருத்ரா நிறுவனத்தின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக இருந்தபோது பா.ஜ.க வின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவில் மாநில செயலாளராக இருந்துள்ளார்.

பாஜக கட்சியில் விளையாட்டு பிரிவில் மாநிலப் பொறுப்பு பதவி பெறுவதற்காக முதலீட்டாளர்களுக்கு தான் திருப்பித் தரவேண்டிய பணத்திலிருந்து அக்கட்சியை சேர்ந்த சில நபர்களுக்கு பணம் கொடுத்தது பற்றியும் தெரிவித்துள்ளார். அதன்படி பணம் கொடுத்ததாக கூறப்பட்ட அட்வகேட் அலெக்ஸ், பா.ஜ.க, வழக்கறிஞர் பிரிவு, பல்லாவரம், சென்னை என்பவருக்கும் ராணிப்பேட்டை பா.ஜ.க மாவட்ட பொறுப்பிலுள்ள டாக்டர்.சுதாகர் என்பவருக்கும் விசாரணைக்கு ஆனாகக் கோரி அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: பொதுமக்களிடம் ரூ.2438 கோடி சுருட்டிய ஆருத்ரா நிறுவனம் : மோசடி வழக்கில் பா.ஜ.க மாநில நிர்வாகி ஹரிஷ் கைது!