Tamilnadu

“எனக்கும் பாலியல் ரீதியாக தொந்தரவுகள் இருந்தது” : கலாஷேத்ரா முன்னாள் மாணவி பகீர் புகார் - போலிஸ் விசாரணை!

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி ஒன்றிய கலாச்சார துறையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் மூத்த ஆசிரியர் ஒருவர் மீது அங்குப் படிக்கும் மாணவர்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.

மேலும் ’கேர் ஸ்பேஸ்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இணையதளத்தில் மாணவர்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்துப் பேசியபோதுதான் இந்த பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது பற்றி அறிந்த உடன் கலாஷேத்ரா நிறுவனம் விசாரணைக் குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

ஆனால் அந்த விசாரணையில், பாலியல் குற்றச்சாட்டுகள் பொய் என்றும், தங்களது அறக்கட்டளையை இழிவுபடுத்தும் நோக்கில் இப்படி வதந்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது என்று கூறியது கல்லூரி நிர்வாகம். இதற்கிடையில் கலாஷேத்ராவின் முன்னாள் இயக்குநர் லீலா சாம்சன், “10 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர்களால் மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல்களை சந்திக்கின்றனர்” என தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆனால் இந்த பதிவை அவர் உடனே நீக்கியுள்ளார். இதையடுத்து இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம், டி.ஜி.பி சைலேந்திர பாபுவுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கலாஷேத்ரா நிறுவனத்தின் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவ மாணவிகள் தொடர் உள்ளிருப்பு ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது, கேரளா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் சென்னை அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். குறிப்பாக 2019 ஆம் ஆண்டு திருவான்மியூரில் உள்ள நடன பள்ளியில் கலாஷேத்ரா நடனம் பயின்றவர் என்றும் அப்பொழுது உதவி ஆசிரியர் ஹரிஷ் தனக்கும் பாலியல் ரீதியாக தொந்தரவுகள் அளித்ததாக கூறி புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் அடையார் உதவி ஆணையர் நெல்சன் முன்னிலையில், சென்னை அடையார் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமாரி தலைமையிலான போலிஸார் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட மூன்று சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், புகாரின் பேரில் கேரளா மாநிலத்தை சேர்ந்த பெண்ணிடம் அடையார் அனைத்து மகளிர் காவல் நிலைய போலிஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டு இருக்கும் உதவி நடன ஆசிரியர் ஹரியிடமும் விசாரணை மேற்கொள்ள போலிஸார் முடிவு செய்துள்ளனர்.

அதேபோல் பாலியல் வழக்கு தொடர்பாக விசாரணைக்காக உதவி பள்ளி ஆசிரியர் ஹரியை காவல் நிலையத்திற்கும் அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக போலிஸார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்; பேராசிரியர் உட்பட 4 பேர் மீது பகீர் புகார்”: கலாஷேத்ராவில் நடப்பது என்ன?