Tamilnadu

“இதுதான் பணிகளை முடித்த லட்சனமா?” : பொய் சொன்ன ஒன்றிய அரசு - அம்பலபடுத்திய அமைச்சர் சேகர்பாபு!

சென்னை யானை கவுனி பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி உள்ளிட்ட பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், “யானைக்கவுனி மேம்பாலம் 7 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. ஏற்கனவே சேதம் அடைந்த மேம்பாலத்தை இடித்துவிட்டு. மீண்டும் புதிய மேம்பாலம் கட்ட கடந்த 2018 ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், பணிகள் நடைபெறாததால் 2019 ஆம் ஆண்டு ஒன்றிய ரயில்வே துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினேன்.

தொடர்ந்து தென்னக ரயில்வே பொது மேலாளரையும் சந்தித்து மேம்பால பணிகளை தொடங்கிட வலியுறுத்தினோம். ஆனால், பணிகள் தொடர்ந்து நடைபெறாத நிலையில் கொரோனா காலத்தை பயன்படுத்தி விரைந்து பணிகளை முடித்திட வேண்டும் என 2020 ஆம் ஆண்டு மீண்டும் தென்னக ரயில்வேவிடம் வலியுறுத்தினோம்.

மார்ச் 15 2023, அன்று நாடாளுமன்றத்தில் யானைகவுனி மேம்பாலம் தாமதம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தேன். இந்த கேள்விக்கு பணிகள் முடிந்து விட்டதாகவே ஒன்றிய துறை அமைச்சர் தவறான பதிலை அளித்தார். இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

ரயில்வே மேம்பாலம் அமைக்க ஆறு கிரிடர்கள் அமைக்க வேண்டும். அதில் தற்போது இரண்டு கிருடர்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. மேலும் இரண்டு கிரிடர்கள் வாங்குவதற்கு ஆடர் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கிரேடர்கள் விரைவில் வந்துவிடும். மீதமுள்ள அடுத்த 2 கிரேடர்களும் விரைவில் கிடைக்கும்.

ரயில்வேக்கு மேம்பாலம் கட்டும் பணியில் ஈடுபட்ட கான்ட்ராக்டர்கள் முறையாக பணியை மேற்கொள்ளாததால் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேம்பாலம் கட்டுவதற்கான நிதியில் எந்த பிரச்சனையும் இல்லை. நிதி முழுமையாக இருக்கிறது. எங்கள் பணிகளை விரைவுபடுத்தி வரும் டிசம்பர் மாதத்துக்குள் யானை கவுனி மேம்பாலம் அமைக்கும் பணியில் ரயில்வேயின் பணிகள் முழுமையாக முடிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய தயாநிதிமாறன், “9 ஆண்டு பாஜக ஆட்சியில் ஜனநாயகம் அழிந்துவிட்டது. மக்கள் உரிமையை காக்கும் அனைத்து துறைகளையும் அவர்கள் கையில் எடுத்துக் கொண்டு அவர்கள் வைப்பது தான் சட்டம்; அவர்கள் சொல்வது தான் தீர்ப்பு என்ற அளவிற்கு நிலைமை இருக்கிறது.

2009 ஆம் ஆண்டு ராகுல் காந்தி சொன்ன கருத்துக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை என தீர்ப்பளித்துள்ளனர். வரலாற்றிலேயே அவதூறு வழக்குக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதித்தது இல்லை. பாஜக அரசு வந்த பிறகு நீதித்துறை மீது மக்களுக்கு சந்தேகம் வருகிறது. அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அந்த தீர்ப்பு தான் வருகிறது.

இதை அவர்கள் செய்ய முழு காரணம் கர்நாடகா பொது தேர்தல் தான். கர்நாடகாவில் பா.ஜ.க.விற்கு வெற்றி வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. மேலும் கர்நாடகா பாஜகவினர் அதிக ஊழலில் ஈடுபட்டுள்ளனர். இதை திசை திருப்ப இத்தகைய செயல்களில் பாஜக ஈடுபடுகிறது” என குற்றம் சாட்டினார்.

Also Read: “ராகுல் காந்தி பதவி பறிப்பு: தோதான நீதிபதியை வைத்து தீர்ப்பு எழுதிய மோடி அரசு” - திருமாவளவன் ஆவேசம் !