Tamilnadu
"எந்த துறைக்கும் நிதிஒதுக்கீடு குறைக்கப்படவில்லை" -அதிமுக MLA-வின் குற்றச்சாட்டுக்கு நிதியமைச்சர் பதிலடி!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 9ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. பின்னர் ஆளுநர் உரை மீது விவாதம் நடைபெற்றது. இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரைநிகழ்த்தினார். பின்னர் அந்தக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
அதனைத் தொடந்து தமிழ்நாடு அரசின் 2023-2024ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கைக் கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதி நிலை அறிக்கையை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், இன்று ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா கொண்டு வரப்பட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக எம்.எல்.ஏ சு.ரவி, "ஊரக வளர்ச்சித் துறைக்கு கடந்த ஆண்டை விட குறைவான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது" என குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் "ஊரக வளர்ச்சித் துறையில் செயல்பட்டு வந்த ஜல் ஜீவன் மிஷன் நிர்வாக காரணங்களுக்காக மற்றொரு துறைக்கு மாற்றப்பட்டதால் 3 ஆயிரம் கோடி ரூபாய் இத்துறையில் இருந்து மற்றொரு துறைக்குச் சென்றுள்ளது. அதன்படி 2023-24 நிதிநிலை அறிக்கையில் 9.4% கடந்தாண்டை விட அதிகமாகவே ஊரக வளர்ச்சித்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், "அனைத்து துறைகளுக்கும் கடந்த ஆண்டை விட அதிக தொகைதான் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக உறுப்பினர் கூறுவது போல எந்தத் துறைக்கும் கடந்த ஆண்டை விட குறைவான தொகை ஒதுக்கப்படவில்லை" என விளக்கமளித்தார். அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்தார்.
Also Read
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!