Tamilnadu

”சென்னையில் தாளமுத்து மற்றும் நடராஜன் நினைவிடம்” : நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள அறிவிப்புகள் என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 9ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. பின்னர் ஆளுநர் உரை மீது விவாதம் நடைபெற்றது. இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரைநிகழ்த்தினார். பின்னர் அந்தக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் 2023-2024ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மின்னணு வடிவிலான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வாசித்து வருகிறார். அதன் விவரம் வருமாறு:-

தாய் தமிழைக் காக்க, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசன் ஆகியோரின் பங்களிப்பைப் போற்றும் வகையில், சென்னையில் நினைவிடம் ஒன்று அமைக்கப்படும்.

அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளைப் பரப்புவதற்காக, அவரது படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். இதற்காக அரசால் ஐந்து கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

தமிழ் மொழி உலக மொழியாக வளர்வதற்கு, புகழ்பெற்ற வல்லுநர்களைக் கொண்டு.தமிழ்க் கணினி பண்னாட்டு மாநாடு' நடத்தப்படும். தமிழர் பண்பாட்டுத் தலங்களை இணைக்க தமிழ்ப் பண்பாட்டுக் கடல்வழிப் பயணங்கள் ஊக்குவிக்கப்படும்.

முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டையை அரசு வழங்கி வருகிறது. வரும் ஆண்டில், மேலும், 591 அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு இச்சலுகையை அரசு வழங்கும். இலங்கைத் தமிழர்களுக்கு இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 3,959 வீடுகளைக் கட்ட, வரும் நிதியாண்டில் 223 கோடி ரூபாயை அரசு வழங்கும்.

Also Read: தமிழ்நாடு அரசின் 2023- 24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை: பேரவையில் தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் PTR!