Tamilnadu

அமைச்சர் உதயநிதி வரும்வரை காத்திருக்கவைக்கப்பட்டார்களா மாணவர்கள் ?.. தலைமையாசிரியர் விளக்கம் !

தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூர் பார்வைத்திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளியில் பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடைய மாணவர்களுக்கு திமுக சார்பில் மதிய உணவு வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உணவு வழங்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் வர காலதாமதம் ஆனதால் மாணவர்கள் அனைவருக்கும் சரியான நேரத்தில் உணவு வழங்கப்பட்டது. ஆனால், தனியார் ஊடகம் ஒன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும்வரை மாணவர்களுக்கு உணவு வழங்கப்படாமல் காத்திருக்க வைக்கப்பட்டதாக செய்தி ஒன்று வெளியானது.

இந்த செய்தியை எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் பரப்பி வந்த நிலையில், தற்போது உண்மை நிலை குறித்த அறிவிப்பை தஞ்சாவூர் பார்வைத்திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

அவரின் அந்த அறிக்கையில், "தமிழக முதலமைச்சர் மாண்புமிகு. மு. க. ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூர் மாநகர திராவிட முன்னேற்ற கழகத்தினரின் சார்பில் அன்று தஞ்சாவூர் பார்வைத்திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளியில் பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடைய மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவு வழங்கும் விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொள்வதாக இருந்தது.

மாண்புமிகு. அமைச்சர் அவர்கள் வருகை புரிய தாமதமானதால் மாணவர்கள் அனைவருக்கும் சரியான நேரத்தில் உணவு வழங்கப்பட்டு விட்டது. இந்நிலையில் ஜூனியர் விகடன் மின் இதழில் அமைச்சர் அவர்கள் வரத்தாமதமானதால் மாணவர்களை உணவருந்தாமல் அமர வைத்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இச்செய்தி எங்களுக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. ஏனெனில், மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வரத்தாமதமாகும் என தகவல் தெரியவந்தவுடன் திராவிட முன்னேற்ற கழகத்தினர் மாணவர்களை உணவருந்தாமல் அமர வைக்கக்கூடாது எனக்கூறி மாணவர்களுக்கு மதியம் 12.30 மணிக்கே உணவு வழங்கத் துவங்கிவிட்டனர்.

1 முதல் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் உணவருந்தி விட்ட நிலையில் 14.03.2023 அன்று மதியம் 02.30 மணிக்கு பிறகு பொதுத்தேர்வு எழுதி வந்த 11ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் உணவருந்த அமர்ந்தபோது வருகை புரிந்த தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாணவர்களுக்கு தனது கரத்தினால் உணவளிக்க விரும்பி உணவு பரிமாறினார். மாண்புமிகு. அமைச்சர் அவர்கள் எம் பள்ளிக்கு வருகை புரிந்தது எங்கள் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்வளித்த நிலையில் ஜூனியர் விகடன் மின் செய்தி வெளியானது மிகவும் வருத்தம் அளிக்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: வெளிநாடுகளில் இந்தியாவை அவமானப்படுத்திய மோடி முதலில் கண்­ணா­டியை பார்க்கவேண்டும் -முரசொலி விமர்சனம் !