Tamilnadu
“கழக நிகழ்ச்சிகள் எதிலும் பேனர்கள், கட்அவுட்கள் வைக்கக்கூடாது” : நிர்வாகிகளுக்கு தி.மு.க அறிவுறுத்தல் !
கழகத் தலைவர் உள்ளிட்ட அமைச்சர்கள், கழக முன்னோடிகள் கலந்து கொள்ளும் எந்தவொரு நிகழ்ச்சிகளுக்கும் கழக நிர்வாகிகள் - தோழர்கள் பேனர்கள், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது. இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “2019-ல் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் பேனர் மற்றும் கட் அவுட் கலாச்சாரத்தின் காரணமாக கோவையிலும், சென்னையிலும் இருவர் உயிரிழந்த போது, "திராவிட முன்னேற்றக் கழக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று கழக நிர்வாகிகள் அனைவரையும் நான் ஏற்கனவே பல முறை அறிவுறுத்தியிருக்கிறேன்.
இதனை மீறி வைக்கும் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கழகத் தலைவர் அவர்கள் 13-9-2019 அன்று அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கை வெளிவந்த நாள்முதல் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் பெரும்பாலோர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்காமல், கழகத் தலைவர் அவர்களின் ஆணையை பின்பற்றி வந்தனர்.
இதற்கு மாறாக, பேனர் வைத்த கழக நிர்வாகிகள் சிலர்மீது தலைமைக் கழகம் நடவடிக்கை எடுத்தது. ஆனால், தற்போது ஒரு சிலர், தலைவர் உள்ளிட்ட அமைச்சர்கள், கழக முன்னோடிகள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும், பொதுமக்கள் முகம் சுளிக்கும் வண்ணம் பேனர், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைத்திருப்பதாக தலைமைக் கழகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கழக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்றும்; பொதுக்கூட்டம் அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைக்கலாமே தவிர, சாலை மற்றும் தெரு நெடுகிலும் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் - மக்களுக்கும் பேரிடர் ஏற்படும் வகையில் வைக்கக் கூடாது என்று கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு அறிவிக்கிறேன்.
இந்த அறிவுரையை யாரேனும் மீறியதாக தலைமைக் கழகத்தின் கவனத்திற்கு வருமேயானால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்; தலைமைக் கழக மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டக் கழக நிர்வாகிகள் அனைவரும் எனது இந்த அறிவுரையை கிஞ்சிற்றும் மீறாமல் கடைப்பிடித்து திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு கட்டுக்கோப்பான இயக்கம் என்பதை நிலைநாட்டிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!