Tamilnadu

பணமோசடி வழக்கு.. பா.ஜ.க மாநில நிர்வாகிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!

தூத்துக்குடி முத்து கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவர் இந்த பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தூத்துக்குடி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பா.ஜ.க கட்சியின் மாநில பொருளாதார பிரிவு செயலாளர் வி. எஸ். ஆர் பிரபு என்பவருடன் நட்பாக இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபு அவசர தேவைக்காகப் பரமசிவத்திடம் ரூ. 5 லட்சம் கடனாகக் கேட்டுள்ளார். அதற்குப் பரமசிவம் தற்போது பணம் இல்லை என தெரிவித்துள்ளார். ஆனால் பிரபு பணத்தைக் கொடுத்தால் இரண்டே மாதத்தில் திருப்பி தந்து விடுவதாக உறுதி அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து ரூ.5 லட்சத்தை பிரபுவிடம் வழங்கியுள்ளார். பின்னர் இரண்டு மாதம் கழித்து அவரிடம் பிரபு இதற்காக இரண்டு வங்கி காசோலைகளை வழங்கி உள்ளார். இந்த காசோலையைச் செலுத்திய போது வங்கியில் பணம் இல்லை என தெரியவந்தது. பின்னர்தான் பிரபு தம்மை மோசடி செய்துள்ளார் என்பதை பரமசிவம் உணர்ந்துள்ளார்.

இதையடுத்து பரமசிவம் தூத்துக்குடி விரைவு நீதிமன்ற எண் ஒன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார். பரமசிவன் சார்பில் வழக்கறிஞர் சுபைதரன் ஆஜராகி வாதாடி வந்தார். கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் தூத்துக்குடி விரைவு நீதிமன்ற எண் ஒன்றின் நீதிபதி ஜலதி இன்று தீர்ப்பளித்தார்.

இதில் வழக்குத் தொடுத்த பரமசிவத்திற்கு ரூ. 5 லட்சத்துடன் மற்றும் வழக்கு செலவு சேர்த்து ரூ.10 லட்சம் பணத்தை ஒரே மாதத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் பிரபுவுக்கு விதித்துத் தீர்ப்பளித்தார். பா.ஜ.க மாநில நிர்வாகி ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10 லட்சம் அபராதமும் வழங்கப்பட்டு இருப்பது தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Also Read: குடிப்பதற்காக திருட்டு வாகனத்தில் நகை திருடிவந்த பாஜக நகர செயலாளர்.. அதிரடியாக கைது செய்த போலிஸார் !