Tamilnadu

சொந்த கட்சிக்காரர்களே வைத்த பட்டப்பெயர் '8 தோல்வி எடப்பாடி பழனிசாமி': அமைச்சர் பெரியகருப்பன் விமர்சனம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மக்களுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதன் மூலமாகத்தான் முதல்வருக்குச் சிறப்பு சேர்க்க வேண்டும் என்பது நோக்கம் அல்ல. அதற்கு மாறாக முதலமைச்சரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதன் மூலம் ஏழை எளிய மக்கள், மாணவர் மாணவியர்கள், ஆதரவற்ற மக்கள் என பல்வேறு தரப்பினரும் பயன் பெருவர்.

நாட்டில் பல அகில இந்தியக் கட்சிகள் இருந்தாலும் தி.மு.க கட்சி தனித்தன்மை கொண்ட இயக்கம். தி.மு.க இயக்கம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவான கட்சி அல்ல. மாறாகச் சமுதாய சீர்திருத்த இயக்கமாக அண்ணாவால் துவங்கப்பட்ட இயக்கம்.

கல்வி, வேளாண்மை, தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் மற்ற மாநிலங்களைவிடத் தமிழ்நாடு முதன்மையிடம் பெற்று இருப்பதற்குக் காரணம் முத்தமிழ் அறிஞர் கலைஞர்தான். தமிழர்களின் பெருமையை உலகிற்கு உணர்த்திய தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். இந்திய அரசியலை நிர்ணயிக்கும் தலைவராக இருந்தார் கலைஞர். அகில இந்திய அரசியல் தலைவர்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் ஆலோசனையை கேட்டு நடந்தனர்.அண்ணா, கலைஞர் வழி வந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அனைத்து மொழி பேசுவோரையும் அரவணைத்துச் செல்லும் அன்புத் தலைவராக இருந்து வருகிறார்.

எதிர்க்கட்சி தலைவருக்கு எட்டுத்தோல்வி எடப்பாடி பழனிச்சாமி என அவரது கட்சியைச் சார்ந்தோரே பட்டப்பெயர் வைத்துள்ளனர்" என தெரிவித்துள்ளார்.

Also Read: தமிழ்நாட்டில் முதல்முறை.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்த மொழி ஆய்வகத்தின் 10 சிறப்புகள்!