Tamilnadu

வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய ஜார்க்கண்ட் இளைஞர் கைது .. போலிஸ் அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தொடர்ந்து பரப்பப்படும் வதந்தியால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் வட மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் அச்சத்தை போக்கும் விதமாக பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஐஏஎஸ் குழுவினர் திருப்பூர் கோவை சென்னை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர்.

இதனிடையே வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் போலியான வீடியோக்கள் குறித்து திருப்பூர் சைபர் கிரைம் போலிஸார் கண்காணித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகார் மாநிலத்தை சேர்ந்த ருபேஷ் குமார் என்பவரை கைது செய்திருந்தனர். இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் குமார் (24) என்பவருடைய ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் கணக்கில் வேறு மாநிலங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை தமிழகத்தில் நடந்தது போன்று போலியான வீடியோக்களை சித்தரித்து பதிவிட்டிருந்தது தெரிய வந்தது.

இதைய டுத்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக பிரசாந்த் குமார் மீது வழக்கு பதிவு செய்து, ஜார்க்கண்ட் சென்ற தனிபடை போலிஸார் அவரை கைது செய்தனர். தற்பொழுது அவரை திருப்பூர் அழைத்து வருகின்றனர். திருப்பூர் வந்தவுடன் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “வதந்திகளை கண்காணிக்க குழு.. வட மாநில தொழிலாளர்கள் மீது தனிகவனம்” - காவல்துறைக்கு DGP அறிவுறுத்தல் !