Tamilnadu

“50 பேருக்கு போலி டாக்டர் பட்டம் - பணம் வசூல் செய்ய நூதன மோசடி” : அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 26 ஆம் தேதி சர்வதேச ஊழல் தடுப்பு மையம் மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற அமைப்பின் சார்பில் சினிமா பிரபலங்களுக்கு கௌரவ டாக்டர் மற்றும் வழங்கப்பட்டது.

இந்த பட்டங்கள் அனைத்தும் போலியானவை என தெரிய வந்ததை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் அளித்த புகாரின் அடிப்படையில், பட்டங்களை வழங்கிய ஹரிஷ் மற்றும் அவருடைய கூட்டாளி மகராஜன் (எ) குட்டி ராஜா என்பவரை கோட்டூர்புரம் போலிஸார் ஆம்பூர் அருகே வைத்து கைது செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு பத்து விதமான கேள்விகளை கேட்டு விளக்கத்தையும் போலிஸார் பெற்றுள்ளனர். மேலும் விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை இந்த அமைப்பின் மூலம் 50க்கும் மேற்பட்ட போலி டாக்டர் பட்டம் வழங்கி இருப்பதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் முக்கியமான நாலு பிரபலங்களுக்கு இலவசமாக வழங்குவதாகவும், அவர்களை வைத்து நிகழ்ச்சியை விளம்பரம் செய்து மீதமுள்ள பிரபலங்களிடம் பணம் வசூல் செய்து டாக்டர் பட்டம் கொடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு டாக்டர் பட்டத்திற்கும் 25,000 முதல் 30,000 வரை வசூல் செய்து வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

விருதுகளுக்கு ஏற்றார் போல் பணம் வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.ப் கைது செய்யப்பட்ட குட்டி ராஜா என்பவர் பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளில் மக்கள் தொடர்பு பணிகளை செய்துள்ள காரணத்தினால், அதன் மூலம் பிரபலங்களை அணுகி இந்த போலி டாக்டர் பட்டத்தை பணம் வாங்கிக்கொண்டு பல பிரபலங்களுக்கு கொடுத்ததும் தெரிய வந்துள்ளது.

நிகழ்ச்சி நடத்துவதற்காக லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்து அதில் குறைந்த அளவு தொகை மட்டும் பயன்படுத்தி நிகழ்ச்சியை நடத்துவதாகவும், மீதமுள்ள பணத்தை மோசடி செய்து ஆடம்பரமாக இருந்ததும் தெரிய வந்துள்ளது. ஹரிஷின் தஞ்சாவூர் ஆடுதுறையில் உள்ள வங்கிக் கணக்கை போலிஸார் முடக்கியுள்ளனர். இந்த வங்கிக் கணக்கில் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் இருந்ததாக தெரியவந்துள்ளது.

பெரும்பாலும் டாக்டர் பட்டம் வழங்குவதற்கும் விருதுகள் வழங்குவதற்கும் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் தேவையான பணத்தை வசூல் செய்ய இந்த வங்கிக் கணக்குகளை பயன்படுத்தியதால், இதில் இதுவரை யார் யார் பணம் கொடுத்து உள்ளார்கள் என்ற பட்டியலை தயாரித்து எத்தனை பேருக்கு இன்னும் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து எல்லாம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: போலி டாக்டர் பட்டம் : நடிகர்களை குறி வைத்து ஆளுக்கு ரூ.25,000 வசூல்.. ஹரிஷின் அதிரவைக்கும் வாக்குமூலம் !