Tamilnadu

போலி டாக்டர் பட்டம் : நடிகர்களை குறி வைத்து ஆளுக்கு ரூ.25,000 வசூல்.. ஹரிஷின் அதிரவைக்கும் வாக்குமூலம் !

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்கும் வளாகத்தில் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி விருது வழங்கும் விழாவை சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற தனியார் அமைப்பு நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் வடிவேல், ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான கோபி மற்றும் சுதாகர் என 50க்கும் மேற்பட்டோருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

ஓய்வு பெற்று நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த விழா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும், கையெழுத்து தவறாக முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தரப்பில் மாம்பலம் காவல் நிலையத்திலும் புகார்கள் அளிக்கப்பட்டன.

அதன்படி நிகழ்ச்சி நடத்திய அந்த அமைப்பின் இயக்குனரான ராஜு ஹரிஷ் என்பவர் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தனிப்படை அமைத்து விசாரணை தொடங்கிய நிலையில், அவர் தலைமறைவானதால், காவல்துறையினர் அவரை தேடி வந்தனர். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதால், தலைமறைவாக இருந்த ஹரிஷ், விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த காவல்துறையினர் அவரை தேடி வந்தனர். இதனால் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ராஜு ஹரிஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவில், படிக்க இயலாதவர்களுக்கு கல்வி வழங்குவது, மனித உரிமை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கல்வியில் முன்னேற்றம் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும், இதேபோன்ற துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி நடந்த நிகழ்ச்சிக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் தொடர்பு இல்லை என்றும், அதில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் மனுவில் தெரிவித்து உள்ளார். தன் மீது தவறாக பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில், மார்ச் 1ஆம் தேதி தன்னை கைது செய்யும் நோக்கத்துடன் விசாரணை நடத்தியதாக தெரிவித்துள்ளார். காவல்துறை நடத்தும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாக கூறி, தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முன் ஜாமீன் கோரிய ராஜு ஹரிஷின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து தலையாமறைவாக இருந்த ஹரிஷை தனிப்படை அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று ஆம்பூரில் வைத்து கைது அவர் செய்யப்பட்டார்.

தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இதுபோன்ற டாக்டர் பட்டம் வழங்கும்போது அந்த நபர்களிடம் இருந்து ரூ. 10000 முதல் 25000 வரை வசூல் செய்யப்படுவதாக தெரிவித்தார்.

அதாவது இந்த போலி டாக்டர் பட்டம் பணத்திற்கு ஏற்றவாறு வழங்கப்பட்டு வருவதாக கூறினார். இதற்கான கட்டண தொகையானது ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25ஆயிரம் வரை வசூலிக்கப்படுவதாக கூறினார். மேலும் அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் மூலம் இது போன்ற நிகழ்ச்சிகள் நிகழ்ச்சிகளின் விளம்பரத்துக்காக முக்கிய பிரபலங்களை அவர் உபயோகப்படுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதோடு இந்த நிகழ்ச்சியானது கடந்த ஆண்டு வளசரவாக்கம் பகுதியில் 2 முறையும், கோயம்பேடு பகுதியில் 1 முறையும், தற்போது அண்ணா பல்கலை-யில் 1 முறை என இதுவரை 4 முறை நடத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் ஹரிஷ் தனி புரோக்கர் கூட்டத்தையே நடத்தி வந்துள்ளதும், வருங்காலத்தில் இதுபோன்று லட்ச கணக்கில் மோசடி செய்ய தயாராக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து அவரிடம் இருந்த போலி ஆவணங்கள், டாக்டர் பட்டம், முத்திரைகள், 96 போலி பதக்கங்கள் உள்ளிட்டவையை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் பார்த்திபன், இமான் என இதுவரை 100-க்கும் மேற்பட்டோர்களிடம் இருந்து இதுபோன்று பணம் வசூலிக்கப்பட்டு போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Also Read: "எனது ஐடியாவை திருடிக்கொண்டார்... " -எலான் மஸ்க் மீது மோசடி புகாரளித்த மும்பை இளைஞர் !