Tamilnadu
திடீரென படுக்கையில் பற்றிய தீ.. உறங்குவதற்காக மெழுகுவர்த்தி பற்ற வைத்த மூதாட்டிக்கு நேர்ந்த சோகம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மகாலட்சுமி நகரில் பொன்செட்டி (95) மற்றும் அவரது மனைவி அமிர்தம்மாள் (85) ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களது இரண்டு மகன்களும் சற்று தொலைவில் மற்றொரு வீதியில் அவரவர் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர்.
திருமண விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இரண்டு மகன்களின் வெளியூர் சென்று விட்டனர். இதனிடையே நேற்று மாலை மகாலட்சுமி நகர் பகுதியில் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை நீக்குவதற்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின்வாரிய ஊழியர்கள் பழுது நீக்குவதற்காக வேலை செய்து கொண்டு இருந்துள்ளனர்.
இதன் காரணமாக இரவு படுக்க செல்லும்போது தன் கட்டிலின் கீழ் அமிர்தம்மாள் மெழுகுவர்த்தியை பற்ற வைத்து உறங்கியுள்ளார். இந்த நிலையில், திடீரென நள்ளிரவில் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியிலிருந்து தீ கட்டிலுக்கு பரவியது. அதன் மேல் படுத்திருந்த மூதாட்டி அமிர்தம்மாள் சுதாரிப்பதற்குள் தீப்பிடித்து எரிந்து அலறி துடித்துள்ளார்.
மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்த போது அமிர்தம்மாள் உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளனர்.மேலும் தரையில் படுத்து இருந்த மூதாட்டியின் கணவர் பொன் செட்டி 95 என்பவரை அங்கே இருந்து பத்திரமாக மீட்டு வெளியேற்றினர். ஆனால் இந்த விபத்தில் மூதாட்டி அமிர்தம்மாள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியானார்.
இது குறித்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற பல்லடம் போலீசார், உயிரிழந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பல்லடம் அருகே மகாலட்சுமி நகரில் மெழுகுவர்த்தி பற்ற வைத்த போது எதிர்பாராத விதமாக கட்டிலின் மீது படுத்திருந்த மூதாட்டி ஒருவர் உடல் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!