Tamilnadu

மீனவர்களிடம் இலவச பட்டா வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி.. நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் கைது !

சீர்காழி அருகே பழையாறு மீனவ கிராமத்தில் இலவச பட்டா வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பழையாறு மீனவ கிராமத்தில் 10,000 மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2006 ஆம் ஆண்டு சுனாமியின் போது, கிராமத்தில் வசித்த மக்களுக்கு வீட்டுமனைகள் வழங்கப்பட்ட நிலையில் எஞ்சி இருந்த இடங்களை தற்போது வீடில்லாத மக்களுக்கு வீட்டு முறையாக பிரித்து வழங்க வேண்டும் என கிராமத்தின் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கிராமத்தில் உள்ள மீனவ மக்களிடம் வீட்டு மனைக்கு இலவச பட்டா வாங்கி தருவதாக கூறி, அதே கிராமத்தைச் சேர்ந்த செண்பகசாமி மற்றும் அண்ணாதுரை ஆகியோர் 40க்கும் மேற்பட்டோரிடம் தலா ரூ 20,000 பெற்றுள்ளனர். கிராமத்தைச் சேர்ந்த ஏழை - எளிய மக்களுக்கு மட்டுமே நிலத்தை வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்ட நிலையில், தனி நபர்கள் கிராம மக்களை ஏமாற்றி சிலருக்கு போலி பட்டா வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மேற்படி இரண்டு நபர்களால் பாதிக்கப்பட்ட மக்கள் கிராமத்தினரிடம் முறையீடு செய்ததால் மேற்கண்ட இருவரை கைது செய்ய வலியுறுத்தி பழையாறு துறைமுகத்தில் மீனவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் மக்களை ஏமாற்றிய செண்பகசாமி மற்றும் அண்ணாதுரை ஆகிய இருவரையும் கைது செய்யும் வரை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தைத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் போலியாக பட்டா தயார் செய்ததாக நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் செண்பகசாமியை புதுப்பட்டினம் போலீசார் கைது செய்து சீர்காழி நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர் இதனை அடுத்து நீதிபதி15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.