Tamilnadu

450 சவரன் கொள்ளை வழக்கு.. தீரன் அதிகாரம் ஒன்று பட பாணியில் குற்றவாளியை அடையாளம் கண்ட தமிழ்நாடு போலிஸ்!

2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஒரு பூட்டிய வீட்டில் 450 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் மேற்படி வழக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி அன்று சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சென்னை விரல் ரேகைப்பிரிவு காவல் குழுவினர் சம்பவ இடத்தில் கிடைத்த 10 விரல் ரேகைப் பதிவுகளை வைத்து தமிழ்நாட்டில் திருட்டு குற்றங்களில் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களின் விரல் ரேகைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து விசாரணை செய்ததில், எந்த விரல் ரேகைகளும் ஒத்துப் போகவில்லை.

இதனை அடுத்து விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர்கள் மேசையா அருள்ராஜ் மற்றும் வினோத் ஆகியோர் தேசிய விரல் ரேகை பதிவு கூடத்தில் பராமரிக்கப்படும் “National Automated Fingerprint Identification System” (NAFIS) என்ற மென்பொருள் உதவியுடன் வெளிமாநிலங்களைச் சேர்ந்த குற்றவாளிகளின் கைரேகைகளை ஒப்பீட்டு பார்த்துள்ளனர்.

அப்பொழுது, கோட்டூர்புர வீட்டில் சுமார் 450 சவரன் தங்கநகைகள் திருடிய வழக்கில் சம்பந்தப்பட்ட வெளிமாநில குற்றவாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். பல ஆண்டு காலமாக முடிக்கப்படாமல் இருந்த 450 சவரன் நகை கொள்ளை வழக்கில் குற்றவாளியை அடையாளம் கண்ட விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர்களுக்குச் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Also Read: காஷ்மீரில் விறுவிறு படப்பிடிப்பு.. பாதியில் வெளியேறிய ஒளிப்பதிவாளர்? சோகத்தில் LEO படக்குழு -காரணம் என்ன?