Tamilnadu
அந்த காலத்தில் ‘தமிழ்நாடு’ என்பது இருக்கவில்லையா ? -ஆதாரங்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதிலடி !
ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டை தமிழகம் என குறிப்பிடவேண்டும் என சொன்னது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், சட்டமன்றத்தில் ஆளுநர் உரையிலும் தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்தார். அதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
இதன் காரணமாக தனது கருத்தில் இருந்து பின்வாங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி தனது அறிக்கையில் தமிழ்நாடு என குறிப்பிட்டதோடு, தனது கருத்துக்கு விளக்கம் ஒன்றையும் அளித்தார். இந்த நிலையில், ஆளுநரின் அந்த அறிக்கையை விமர்சித்து சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த பதிவு வருமாறு : “அந்த காலத்தில் ‘தமிழ்நாடு’ என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்று பண்பாட்டுச் சூழலில், 'தமிழகம்’ என்பதை ‘மிகவும் பொருத்தமான வெளிப்பாடு’ என்ற கண்ணோட்டத்துடன் குறிப்பிட்டேன்” என அறிக்கை மலர்ந்திருக்கிறார் ஆளுநர் இரவீந்திர நாராயண இரவி.
இரவீந்திர நாராயண இரவி முன் வைக்கும் வாதம் திமிர்வாதமாகவே இருக்கிறதென்றாலும் ஒரு வாதத்துக்காக அதற்கு பதிலளிக்க முயலுவோம்.
சங்க இலக்கியமான பரிபாடலில் பின்வரும் வரிகள் இடம்பெறுகின்றன.
தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம்
நின்று நிலைஇப் புகழ்பூத்த லல்லது
குன்றுதல் உண்டோ மதுரை கொடித்தேரான்
குன்றமுண் டாகு மளவு.
அதாவது ‘பாண்டிய மன்னனின் பொதியமலை இருக்கும் வரை தமிழ்நாடெங்கும் மதுரையின் பெருமையும் நிலைக்கும்’ என்பதே இதன் அர்த்தம். பரிபாடல் சங்க இலக்கிய வகையை சேர்ந்தது. கிபி 3லிருந்து 6ம் நூற்றாண்டுக்குள் இருக்குமென வரையறுக்கப்படும் சங்க இலக்கியம் இது.
அடுத்ததாக சிலப்பதிகாரம்!
இமிழ்கடல் வேலியைத் தமிழ்நா டாக்கிய
இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்
முதுநீ ருலகில் முழுவது மில்லை
இமய மால்வரைக்கு எங்கோன் செல்வது
கடவு ளெழுதவோர் கற்கே யாதலின்
‘முழங்கும் கடலை வேலியாக கொண்டிருக்கும் இந்நிலம் முழுவதையும் தமிழ்நாடாக்க விரும்பிய உன்னை எதிர்ப்போர் கடல் சூழ்ந்த உலகத்தில் எவரும் இல்லை’ என்கிற அர்த்தம் தொனிக்கும் வரிகள் இவை. கிபி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக சொல்லப்படும் காப்பியம் இது.
தமிழ்நாடு என நேரடியாக குறிப்பிடப்பட்டும் இந்த இரண்டு இடங்களை தாண்டி ‘தமிழ் பரப்பு’, ‘தமிழ் நிலம்’ என அர்த்தம் தொனிக்கும் பல வார்த்தைகளை தமிழிலக்கியங்கள் கொண்டிருக்கின்றன. மொழி வாழ்த்திலேயே கூட ‘திராவிட நல்திருநாடே’ என்ற வார்த்தை இருக்கிறது. ‘தேசம்’, ‘தேசிய இனம்’ ‘நாடு’ குறித்த விவாதங்களும் அரசியலும் 15ம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக் காலத்தில் தொடங்கிதான் உலகம் முழுக்க பரவி வருகிறது. இருந்தாலும் நம் அறிவு நிறைந்த ஆளுநரான இரவீந்திர நாராயண இரவி அதற்கு முன் சென்று தேசிய இன அரசியலை தேட முயலும் சிரமத்தை பட்டிருக்கிறார். ஆனாலும் பாருங்கள், தமிழ்நாடு என்பது ஒரு முக்கியமான கருத்தியலாகவே ஈராயிரம் ஆண்டுகளாக இருந்து வருவதற்கான சாட்சியை நம் இலக்கியங்கள் கொண்டுள்ளது.
இது போக, ஆளுநர் இரவீந்திர நாராயண இரவிக்கு பிடித்த வரலாற்று பண்பாட்டு சூழலிலேயே பார்த்தீர்களானால் ‘தமிழ்நாடு’ குறிக்கப்படும் கிபி 2ம் நூற்றாண்டிலும், ஏன் 6ம் நூற்றாண்டிலும் கூட ‘இந்தியா’ என்கிற வார்த்தை இந்திய மொழிகள் எதிலும் இல்லை. சிந்து, சிந்தியா போன்ற வார்த்தைகள்தாம் இருந்தது. இந்து மதம் என்கிற மதத்தையே ஆங்கிலேயர்கள் அளித்த அடையாளம்தான். 15ம் நூற்றாண்டுக்கு பின் உருவான நாடு என்கிற கருத்தாக்கம் பற்றிய வரலாறு புரிவதால்தான் கிபி 2-ல் ‘இந்தியா’ எங்கு இருந்தது என்ற கேள்வியை தாண்டி நகர்கிறோம்.
என்ன இருந்தாலும் ஆளுநர் இரவீந்திர நாராயண இரவி நாகரிகத்துக்கு 4000 வருடங்கள் மூத்தவர்கள் அல்லவா? மூத்தவர்கள்தானே இளையோரின் முட்டாள்தனத்தை சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது?
இருந்தும் ஆளுநர் இரவீந்திர நாராயண ரவி அடங்க மாட்டார் என்பதால், அவர் சார்ந்திருக்கும் ஒன்றிய அரசு (மத்திய அரசு) குறித்து பேரறிஞர் அண்ணா முன் வைத்த வரலாற்று பண்பாட்டுச் சூழல் பின்னணியிலான விளக்கத்தையும் சொல்லி விடுவோம்:
“மத்திய அரசு பலமாக இருந்தது குப்த சாம்ராஜ்யத்தில்! மத்திய அரசு பலமாக இருந்தது மொகலாய சாம்ராஜ்யத்தில்! மத்திய அரசு பலமாக இருந்தது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில்! ஆனால் இன்று அந்த சாம்ராஜ்யங்கள் எங்கே? சரிந்த சாம்ராஜ்யங்களுடன் இப்போது இருக்குற சாம்ராஜ்யத்தை ஒப்பிடுவதற்கு உள்ளபடியே வருத்தப்படுகிறேன். அந்த சாம்ராஜ்யவாதிகள் - தமது சாம்ராஜ்யங்களுக்கு அதிகமான வலிவு தேட முயற்சி செய்த ஒவ்வொரு நேரத்திலும் சரிவுதான் ஏற்பட்டது என்பதை சரித்திரம் உணர்ந்தவர்கள் அறிவார்கள்."
அறிந்து கொள்ளுங்கள் ஆளுநர் இரவீந்திர நாராயண இரவி அவர்களே!
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!