Tamilnadu
“நீங்க ட்ரவுசர் போட்ட காலத்திலேயே ஆளுநர்களை கையாண்டது தமிழ்நாடு” : RN.ரவி, பாஜக கும்பலுக்கு தரமான பதிலடி!
‘சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்குகிறது’ என்கிற வரிகளை யார் பேச மாட்டார்?
ஆளுநர் ஆர் என் ரவி பேச மறுத்திருக்கிறார்.
இன்று கூடிய சட்டப்பேரவையின் முதல் நாளில் அரசு வழங்கும் அறிக்கையை வாசிக்க வேண்டிய மரபை ஆளுநர் மீறியிருக்கிறார். அறிக்கை கொண்டிருந்த மேற்குறிப்பிட்ட வரிகளை அவர் வாசிக்கவில்லை. ஆளுநரின் இந்த நடத்தைக்கு உடனே எழுந்து முதல்வர் கண்டனம் தெரிவித்ததும் அகில உலக வரலாற்றில் எங்கும் காணாத நகைச்சுவையாய் ஆளுநர் வெளிநடப்பு செய்திருக்கிறார்.
தமிழ்நாட்டின் தலைவர்களது பெயர்களை சொல்ல மறுப்பது கூட அவர் வரும் பா.ஜ.க. அரசியல் முகாமின் நிலைப்பாடு என்பதை புரிந்து கொள்ளலாம். அம்பேத்கரின் பெயரையும் சொல்ல ஆர்.என்.ரவி விரும்பாததன் வழியாக பா.ஜ.க அம்பேத்கரை குறித்து போடும் நாடகத்தை அம்பலமாக்கியதற்கு அவரை முதற்கண் பாராட்டிவிடுவோம்.
பார்ப்பனியத்தை தூக்கிப் போட்டு மிதித்த அம்பேத்கரை எக்காலத்திலும் பா.ஜ.க ஏற்க முடியாதென்பதைத்தான் ஆர்.என்.ரவி காட்டியிருக்கிறார். ஆனால், முதல் வரியில் தலைவர்களின் பெயர்கள் இல்லை. மாறாக வார்த்தைகள் இருக்கின்றன. முக்கியமான வார்த்தைகள். அவற்றையும் ஆர்.என்.ரவி பேச மறுத்திருக்கிறார்.
’சமூகநீதி’ என்கிற வார்த்தையை பேச மறுத்திருக்கிறார். அதாவது எல்லா சமூகங்களுக்கான நீதியையும் அவர் ஏற்கவில்லை. அதன் அர்த்தம் இட ஒதுக்கீடை அவர் ஏற்கவில்லை. எல்லா சமூகங்களும் முன்னேற வேண்டுமென்பதை அவர் ஏற்கவில்லை. எல்லா சமூகங்களை சேர்ந்தவர்களும் படிக்க வேண்டும், வேலை பெற வேண்டும் ஆகியவற்றை அவர் ஏற்கவில்லை. ஏனெனில் அவர் சார்ந்த பார்ப்பன சமூகம் மட்டுமே முன்னேறியிருக்க வேண்டும் என்பதே அவருக்கும் அவர் சார்ந்த பா.ஜ.க-வுக்குமான நிலைப்பாடு.
அடுத்த வார்த்தை ’சுயமரியாதை.’ பா.ஜ.க.வினர் சுயமரியாதையை ஏற்றுக் கொள்வதில்லை. காரணம் பெரியார் அல்ல, பார்ப்பன பீடத்துக்கு அடிமையாக கிடந்து வாழ்க்கை ஓட்ட விரும்புபவர்கள்தான் பா.ஜ.க.வில் இருப்பவர்கள்; பா.ஜ.க அரசியலை ஆதரிப்பவர்கள். மானம், சூடு, சொரணை போன்றவற்றை ஏற்காதவர்களே அவர்கள். வெட்கமே இன்றி பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கேட்டு விடுதலை வாங்கி வாழ்ந்து கிடந்த சாவர்க்கரின் வாரிசுகள் அவர்கள். நிச்சயமாக அவர்களுக்கு சுயமரியாதை கிடையாது. சுயமரியாதை இல்லாத, மதிக்காத ஆட்கள்தான் அவர்களின் இலக்கு.
‘அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’ என்ற வார்த்தைகளையும் ஆர்.என்.ரவி உச்சரிக்கவில்லை. அனைவரும் வளர்ச்சி பெறுவதில் அவருக்கு உடன்பாடில்லை. அவருக்கு சோறு போட்டு வளர்த்த ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு பார்ப்பனர்களும் பனியாக்களும் மட்டுமே வளர வேண்டும். பிற எவரும் வளரக் கூடாது. பார்ப்பன பனியாக்களுக்கு அடிமைகளாக இருக்க வேண்டும். அதுவே அவர்களின் விருப்பம்.
’சமத்துவம்’ என்கிற வார்த்தையை பேச மறுத்திருக்கிறார். ஆர்.என்.ரவியைப் பொறுத்தவரை எவரும் சமமில்லை. ஒருவருக்கு மேல் ஒருவர் இருப்பதுதான் ஆர் என் ரவி மற்றும் பாஜக, ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கை. சமத்துவமற்ற சமூகத்தை உருவாக்கிய கூட்டத்துக்கு சமத்துவம் என்கிற வார்த்தையே கூட கசப்பு தருவதில் ஆச்சரியம் இல்லை.
அடுத்ததாக அவர் பேச மறுத்த வார்த்தை ’பெண்ணுரிமை’. பெண்களை சமமாக கருதாதவர்கள் அவர்கள். ஆணுக்கு கீழே அடிமையாக இருப்பவர்களே பெண்கள் என்பவர்கள் அவர்கள். பெண் வேலைக்கு போனால் களங்கமாகி விடுவாள் என உளறுவோரை குருக்களாக கொண்டவர்கள் அவர்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பே ஆண்களுக்கான அமைப்புதான். பெண்களை வன்புணர்ந்து கொல்வதை அரசியல் ஆயுதமாக கொள்ளும்படி சொன்ன தலைவர்களை கொண்டோர் அவர்கள்.
’மதநல்லிணக்கம்’ என்கிற வார்த்தை அவர்களுக்கு வேப்பங்காய். மதவாதம்தான் அவர்களுக்கு பிடித்த வார்த்தை. இந்துத்துவ மதவாதம்தான் அவர்களுக்கு அரசியல். தமிழ்நாட்டின் பெரும்பான்மை இந்துக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி உதவிய திராவிட இயக்கம் முன் வைக்கும் மதநல்லிணக்கம், 10 சதவிகிதம் என சொல்லி அந்த இந்துக்களின் கல்வி வாய்ப்பை களவாடும் பாஜகவின் திருட்டுத்தனத்துக்கு நிச்சயம் சிம்மசொப்பனமே. அந்த வார்த்தை அவர்களை அச்சுறுத்தும் வார்த்தை.
’பல்லுயிர் ஓம்புதல்’ என்கிற வார்த்தையையும் ஆர் என் ரவி பேசவில்லை. சைவப்பட்சிணிகளாக தங்களை முன்னிறுத்தும் கூட்டம் ஏன் எல்லா உயிர்களையும் பேணிக் காக்க விரும்பும் வார்த்தையை மறுக்கிறது? ஒருவேளை மாட்டுக்கறியையும் குதிரைக்கறியையும் தின்று கொழுத்துக் கொண்டிருந்த காலம் ஆர் என் ரவியின் மனதுக்குள் எச்சில் வழிய விட்டிருக்கலாம். அல்லது வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து சம்பாதிக்க மாடுகளை கொல்ல வேண்டிய அவசியம் புரிந்திருக்கலாம். அடிப்படையில் அவர்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா உயிர்களுக்குமே எதிரானவர்கள்.
மற்றபடி இன்று ஆர்.என்.ரவி செய்ததெல்லாம் வேடிக்கை கூத்து. இவர் இப்படி செய்வாரென்பது தமிழ்நாட்டுக்கு தெரியும். நாகாலாந்து தொடங்கி ஊர் ஊராக சென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு தொல்லை கொடுக்கத்தான் இந்த ஆளுநர்கள் அனுப்பப்படுகிறார்கள். பா.ஜ.க.வுக்கு அது மட்டுமே நோக்கம். பாண்டிச்சேரி தொடங்கி, கேரளா, நாகலாந்து, மேற்கு வங்கம் என எல்லா ஊர்களிலும் பா.ஜ.க அனுப்பும் ஆளுநர்களுக்கு வேலை குடைச்சல் கொடுப்பது மட்டும்தான். ஷூக்குள் மாட்டிய கல்லும் ஆளுநரும் ஒன்று. அது ஏனோ பாஜகவை பற்றி பேசும் உதாரணங்களில் இயல்பாகவே ஷூ இடம் பிடித்துவிடுகிறது.
ஆர்.என்.ரவியின் ஆட்டத்துக்கு எல்லாம் தமிழ்நாடு எப்போதே பதில் சொல்லிவிட்டது. பிற மாநிலங்களை காட்டிலும் ஆளுநர்களை கையாளுவதில் அனுபவம் வாய்ந்த மாநிலம் தமிழ்நாடு. ஆர்.என்.ரவி.ட்ரவுசர் போட்டு சிறுவனாக சுற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே ‘ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை’ என அறிஞர் அண்ணா பேசிய மாநிலம் இது. அப்போது அவருக்கு விவரம் தெரியாமல் அந்த வரலாறு தெரியாமல் இருந்திருக்கலாம். அதற்கு பிறகும் அவர் அந்த வரலாறை கற்க மறுத்திருந்தால், அந்த பாடத்தை அவருக்கு தமிழ்நாடு கற்பிக்கும்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!