Tamilnadu

“யாரு பெருசுனு அடிச்சு காட்டு..” - பறந்த நாற்காலிகள், உருட்டுக்கட்டை.. கூட்டத்தில் மோதிக்கொண்ட பாஜகவினர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் அருள் தலைமையில் நேற்று செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதனுடன் சேர்ந்து பாஜகவின் மற்றொரு பிரிவான சக்தி கேந்திரா நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் 500-க்கு மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது புதிய நிர்வாகிகள் நியமனம் செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையானது மாவட்ட தலைவர் அருளின் ஆதரவாளரான சங்கராபுரம், ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன் தரப்பினருக்கும், முன்னாள் மாவட்ட தலைவர் பாலசுந்தரத்தின் ஆதரவாளரான முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் ஆரூர் ரவி தரப்பினருக்கும் இடையே வாக்குவாதமாக மாறியது.

இந்த வாக்குவாதத்தில் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையில் தாக்கிக்கொண்டதால் கைகலப்பாக மாறியது. இதில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் சட்டையை பிடித்து இழுத்து சண்டைபோட்டுக்கொண்டனர். வடிவேலு பாணியில் "என்ன அடி.." என்று சொல்வது போல், சரமாரியாக அடித்து தாக்கிக்கொண்டனர்.

அதோடு ஆத்திரத்தில் கூட்டத்தில் அமர வைக்கப்பட்ட நாற்காலிகளையும் எடுத்து மாறி மாறி தாக்கிக்கொண்டனர். அதோடு இந்த கூட்டத்தில் உருட்டு கட்டைகள், இரும்பு ராடுகளால் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக்கொள்ள, அதில் 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பலத்த காயம் அடைந்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்‌. பாஜகவினருக்கிடையே ஏற்பட்ட மோதலால் திருமண மண்டபம் சிறிய போர்க்களம் போல் காட்சியளித்தது. தொடர்ந்து சம்பவ குறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், விரைந்து வந்த அவர்கள் இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை செய்தனர்.

இதையடுத்து முன்னாள் மாவட்ட தலைவர் பாலசுந்தரத்தின் ஆதரவாளர்கள் அங்கிருந்து வெளியேறிய நிலையில், அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பாஜக கூட்டத்தில் கோஷ்டி மோதல் ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read: கடத்தலுக்காகவே பர்னிச்சர் கடை நடத்திய கட்டை பாஸ்கர் - சசிகலா உறவினர் கைது வழக்கில் அதிரடி காட்டிய போலிஸ்!