Tamilnadu

வீட்டிற்கு ஒரு நூலகம்.. அண்ணாவின் கனவை நிறைவேற்றும் அரசு: பெருமிதத்துடன் சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 46-வது புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து எழுத்தாளர்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதை வழங்கினார்.

பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்," காலையில் இலக்கிய திருவிழா, மாலையில் புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்துள்ளேன். தமிழ்நாட்டில் தமிழாட்சி நடந்து கொண்டு இருக்கிறது என்பதற்கு இவை இரண்டும் சாட்சியாக இருக்கின்றன.

ஒரு காலத்தில் சென்னையில் மட்டுமே புத்தகக் கண்காட்சி நடந்தது. கடந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சியை நடத்துவதற்கு அரசு ஆணையிட்டு ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்குவது நாட்டில் அறிவு ஒளி பரவ வேண்டும் என்பதற்காகத்தான். வீட்டிற்கு ஒரு நூல் நிலையம் அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டார் பேரறிஞர் அண்ணா. அவரின் நோக்கத்தை உருவாக்கவே மாவட்டம்தோறும் புத்தகக் கண்காட்சிகள், இலக்கிய விழாக்களை நடத்த இந்த அரசு உதவி செய்து வருகிறது.

தமிழின் மீதும் புத்தகங்கள் மீதும் எழுத்தின் மீதும் எழுத்தாளர்கள் மீதும் மாறாக் காதல் கொண்டவர் முத்தமிழறிஞர் கலைஞர். கடந்த ஓராண்டில் தமிழுக்கும், எழுத்துக்கும், எழுத்தாளர்களுக்கும் அளவில்லாத ஆக்கப்பணிகளை தமிழ்நாடு அரசு செய்துள்ளது.

எழுத்தும், இலக்கியமும் மொழியை வளர்க்கின்றன. வளர்ப்பது மட்டுமல்ல காக்கின்றன. மொழி சிதைந்தால் இனம் சிதையும். இனம் சிதைந்தால் நம்முடைய பண்பாடு சிதைந்துவிடும். அடையாளம் போய்விட்டால் தமிழன் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியை இழந்து விடுவோம்." என தெரிவித்துள்ளார்.

Also Read: நீட் முதல் AIIMS வரை.. டெல்லியில் ஒன்றிய அமைச்சரிடம் வைக்கப்பட்ட 11 கோரிக்கைகள் என்னென்ன? -அமைச்சர் மா.சு