Tamilnadu

"அதிமுக செய்த தவறை சரி செய்ததால் 6 மாதத்தில் ரூ.400 கோடி லாபம்": அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுவது என்ன?

சென்னை தெற்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி, புழுதிவாக்கத்தில் 186வது வட்ட தி.மு.க சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நினைவுநாள் பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா. சுப்பிரமணியம், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் உட்படப் பலர் கலந்து கொண்டு பேசினர்.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்," திருச்சி மணப்பாறை பகுதியில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ரூ.2 ஆயிரம் கோடி செலவில் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் அமைக்கப்பட்டது.

இந்த நிறுவனத்தில் கெட்டியான மரங்களில் இருந்து வன்மரக்கூழ் கொண்டு அட்டை தயாரிக்கப்படும். இந்த வன் மரக்கூழை தமிழகத்தில் தயாரிக்காமல் வெளிநாடுகளில் இருந்து மாதந்தோறும் இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் கமிஷன் பெற வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் மரக்கூழ் தயாரிக்கப்படவில்லை.

பிறகு ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு கடந்த ஒன்றரை வருடத்தில் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் ரூ.1385 கோடி செலவில் வன்மரக்கூழ் தயாரிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். தற்போது திருச்சியில் தயாரிப்பதால் கடந்த 6 மாதத்தில் மட்டும் ரூ.400 கோடி தமிழக அரசுக்கு லாபம் வந்து உள்ளது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம் என்பது போல் இது உள்ளது"என தெரிவித்துள்ளார்.

பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ஏழை, பணக்காரன் எல்லாரும் சமம் என்ற திராவிட மாடல் இலக்கணத்தை உருவாக்கியது நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். அதேபோல் ஏற்ற தாழ்வு இல்லாமல் எல்லாருக்கும் சமமான கல்வியைக் கிடைக்க வேண்டும் என சமச்சீர் கல்வித் திட்டத்தை உருவாக்கித் தந்தவர் பேராசிரியர் அன்பழகன் என தெரிவித்துள்ளார்.

Also Read: “தமாசு... தமாசு..” : 2022ல் வடிவேலுவை மிஞ்சி காமெடி செய்த அண்ணாமலை - கலாய்த்து தள்ளிய பிரபல பத்திரிகை !