Tamilnadu

“பணியின்போது இறந்த காவலர்களின் வாரிசுகளுக்கு வேலை - கிடப்பில் கிடந்த திட்டத்தை புதுப்பித்த முதல்வர்”: DGP

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் டி.ஜி.பி., சைலேந்திர பாபு திருநெல்வேலி மாவட்டத்தில் ஆய்வுப் பணி மேற்கொண்டார். அப்போது புதிய ரோந்து வாகனத் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். பின்னர் ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு அறையை திறந்து வைத்தும், அங்குள்ள போலீசாரின் குடும்பத்தினரை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்

மேலும், புதிதாக கட்டப்பட்ட திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மற்றும் மாநகர ஆயுதப்படை அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட்ட அவர், மாவட்டத்தில் புதிதாக நிலைய வரவேற்பாளர் பணியில் அமர்த்தப்பட்ட 33 பேருக்கு பணிநியமண ஆணைகளை வழங்கினார். அதோடு திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் 11 பேருக்கு நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் முழுவதும் 3967 ரெளடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் நெல்லை சரகத்தில் மட்டும் 777 மட்டும் ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நெல்லை சரக பகுதியில் சாதி ரீதியிலான மோதல்கள் மற்றும் கொலைகளை தடுக்க மூன்று அடுக்கு கண்காணிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் நகர்ப்புரப் பகுதிகளில் கூடுதலாக ரோந்துப் பணி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக புதிதாக 400 ரோந்து வாகனங்கள் காவல்துறையின் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் மற்றும் மாநகரப் பகுதிகளில் ரோந்துப் பணிகளை மேற்கொள்வதற்காக 69 ரோந்து வாகனங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. அந்த வாகனங்கள் மூலம் செயின் பறிப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றைத் தடுக்க முடியும் என நம்புகிறோம். இந்தப் பணிக்காக கூடுதல் காவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள்

இந்த ஆண்டு தமிழக முழுவதும் 23 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை தொடர்பாக 9,207 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 12,635 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களின் 4003 நபர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்ட 2384 சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் கஞ்சா விற்பனைக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கஞ்சா நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லையில் மட்டும் 257 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1241 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1 கோடி அளவிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 565 பேரில் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 3967 ரெளடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் நெல்லை சரகத்தில் மட்டும் 777 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை சரக பகுதியில் ஜாதிய ரீதியிலான மோதல்கள் மற்றும் கொலைகளை தடுக்க மூன்று அடுக்கு கண்காணிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளோம்.

அதன்படி முதல் அடுக்கில் காவல் நிலைய அளவில் ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு பிரிவு போலிஸார் கண்காணிப்பு பணியை மேற்கொள்வார்கள். இரண்டாம் அடுக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்லது மாநகர காவல் ஆணையாளர்கள் தலைமையிலான கண்காணிப்பு பணி நடைபெறும். மூன்றாவது அடுக்கில் சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிப்பு பணி மேற்கொள்ள இந்த திட்டத்தின் மூலம் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

பணியின்போது இறந்து போன காவலர்களின் குடும்பங்களுக்கு வாரிசு வேலை என்பது 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. தற்போது முதல்வர் உத்தரவின் பேரில் 1132 பேருக்கு நிலைய வரவேற்பு அதிகாரி என்கிற பதவி வழங்கப்பட்டுள்ளது. போக்சோவில் இந்தாண்டு 4400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற வழக்குகளில் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கூலிப்படைக்கு எதிரான நடவடிக்கைகள் தமிழகம் முழுவதும் எடுக்கப்பட்டு சிறப்பு படை உருவாக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் கூலிப்படை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது” என கூறினார்.

Also Read: “இது பெரிய கேவலம்.. ரபேல் வாட்ச்சை கட்டியிருப்பதற்கு அண்ணாமலை வெட்கப்பட வேண்டும்”: கே.பாலகிருஷ்ணன் சாடல்!