Tamilnadu

நேற்று என்ஜினீயர்.. இன்று கல்லூரி மாணவர்.. ஆளுநர் தாமதத்தால் தொடரும் உயிர்பலிகள்!

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் ‘ஆன்லைன் சூதாட்டம்‘ மூலம் அதிக தற்கொலைகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்யவேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்பதாகக் கூறி, அ.தி.மு.க. அரசு. அவசரக் கோலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய சட்டம் இயற்றியது. ஆனால், உச்சநீதிமன்றம் அதன் சட்ட ஓட்டைகளைச் சுட்டிக் காட்டி அச்சட்டத்தை செல்லாது என்று தீர்ப்புக் கொடுத்து விட்டது.

இதையடுத்து, தி.மு.க. தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, இந்த ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தை மீண்டும் வலுவான முறையில் இயற்றிட, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் சந்துரு அவர்களைக் கொண்டு ஓர் ஆய்வுக் குழுவை நியமித்து, அவரது கருத்துரை - பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு, அவசரச் சட்டம் (ordinance) இயற்றப்பட்டு, பிறகு, அடுத்துக் கூடிய தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டத்தில் தடைக்கான தனி மசோதாவே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு , கடந்த அக்டோபர்-28 ஆம் தேதி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது.

ஆளுநர் விளக்கம் கேட்டதையடுத்து, தமிழக அரசு உரிய விளக்கத்தை அளித்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தக்க காரணம் இன்றி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் அவசரச் சட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை. மேலும் அவசர சட்டமும் காலாவதி ஆகி விட்டது.

இந்த மசோதா என்பது உயிர்களைக் காக்கும் முக்கியமான மசோதா, ஆன்லைன் சூதாட்டம் மூலம் பணம், பொருள்களை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் வேதனையான நிலை அன்றாடச் செய்தியாகிவிட்டது. நேற்று கோவையில் என்ஜினீயர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த துக்க சம்பவம் அடங்குவதற்குள் இன்று கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள காமராஜர் பொறியியல் கல்லூரியில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வினோத்குமார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் டென்னிஸ் விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர் .

இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே ஆன்லைனில் டென்னிஸ் விளையாடி வந்துள்ளார். இதனால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று காலை கல்லூரிக்குச் செல்லாமல் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியிலேயே இருந்துள்ளார்.

பிறகு சக மாணவர்கள் கல்லூரிக்கு வராத வினோத்குமாரை தேடிய போது, அவர் விடுதி அறையில் தூக்கிட்டு சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த போலிஸார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: ரயிலில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை எல்லாம் கிடையாது -ஒன்றிய அரசின் பதிலால் அதிர்ச்சி !