Tamilnadu
மதுரை விமானநிலையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு வீரர்களை அளிக்க முடியாது - கைவிரித்த ஒன்றிய அரசு !
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களின் ஒன்றாகவும் தென்தமிழ்நாட்டின் மிகப்பெரிய நகரமாகவும் மதுரை இருந்து வருகிறது. இந்த நகரத்தில் அமைந்துள்ள விமானநிலையத்தை மதுரை மக்கள் தவிர தென்தமிழகத்தில் ஏராளமான பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த விமான நிலையம் கடந்த 2012ம் ஆண்டில் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. தனப்பினர் இங்கிருந்து முதலில் கொழும்புக்கும், துபாய்க்கும் விமானங்கள் இயக்கப்பட்டன. இது தவிர முக்கிய நகரங்களுக்கும் இங்கிருந்த விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
எனினும் இங்கு போதிய பாதுகாப்பு வீரர்கள் இல்லாததால் இரவு நேரத்தில் எந்த விமானமும் இயக்கப்படவில்லை. இதனால் பாதுகாப்பது வீரர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தவேண்டும் என ஒன்றிய அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்த நிலையில், அது குறித்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கிடேசன் நாடாளுமன்றத்தில் இது குறித்து கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கு ஒன்றிய அரசின் பதில் குறித்தும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "மதுரை விமான நிலையத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் எண்ணிக்கை போதாமையால் கூடுதல் விமானங்களை இயக்க முடியவில்லை. இதனால் வெளி நாடுகளுக்கான விமானங்கள் மதுரைக்கு வருவதில் சிரமம் ஏற்படுகிறது. இங்கு வர வேண்டிய வாய்ப்புகள் வேறு விமான நிலையங்களுக்கு சென்று விடுகின்றன. ஆகவே சி.ஐ.எஸ்.எப் படை வீரர்கள் கூடுதலாக மூன்றாவது பணி நேரத்திற்கு நியமனம் செய்யப்பட வேண்டும் என்று நீண்டநாட்களாக கோரிக்கையை நானும், தென் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதுரை தொழில் வர்த்தக சபையினரும் முன் வைத்து வருகிறோம். மதுரையை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி வருகிறோம். இது குறித்து நான் நாடாளுமன்றத்தில் கேள்வி (எண் 1499/15.12.2022) எழுப்பி இருந்தேன்.
அதற்கு பதில் அளித்த மாண்புமிகு ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து இணை அமைச்சர் வி. கே.சிங்
"இப்போதைக்கு இந்திய தொழில் பாதுகாப்பு படை எண்ணிக்கையை அதிகரிக்கும் உத்தேசம் இல்லை. மொத்த பணியிடங்கள் 268, அவற்றில் நிரப்பப்பட்டு இருப்பது 263. விமானங்கள் காலை 7.15 லிருந்து இரவு 8 மணி வரைதான் இயக்கப்படுகின்றன. கூடுதல் விமானங்கள் இந்த நேரத்தை கடந்து இயக்கப்பட்டால் கூடுதல் தொழில் பாதுகாப்பு படை வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் பதில் தலை கீழாக இருக்கிறது. இரவு விமானங்கள் இல்லையே என்றால் இந்திய தொழில் பாதுகாப்பு படை போதவில்லை என்பதும், தொழில் பாதுகாப்பு படையை கூடுதலாக கேட்டால் கூடுதல் விமானங்கள் வந்தால் தருகிறோம் என்பதும் போகாத ஊருக்கு வழி சொல்வது போல இருக்கிறது.
மத்திய, தென் தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களுக்கு பயன் அளித்து வரும் மதுரை விமான நிலையம் சம்பந்தப்பட்ட இக்கோரிக்கை இப்படி தொடர்ந்து புறம் தள்ளப்படுகிறது. இக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் மதுரை தூத்துக்குடி தொழில் வளப் பாதையும் வலுப்பெறும். தமிழகத்திற்கு ஒன்றிய அரசு காட்டும் பாரபட்சத்தின் நீட்சியாகவே இந்த கோரிக்கையை ஏற்க மறுப்பதும் உள்ளது. ஆனால் மதுரை வளர்ச்சிக்கான எங்கள் குரல் ஓயாமல் ஒலிக்கும். மதுரை மக்களின் கருத்தையும் திரட்டி ஒன்றிய அரசை நிச்சயம் ஏற்க வைப்போம்" எனக் கூறியுள்ளார். .
Also Read
-
“எவ்வளவு தைரியம் இருந்தா இங்க கொண்டாடுவீங்க..” -கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தடுத்து இந்துத்வ கும்பல் அடாவடி
-
“அணுசக்தி என்பது வணிகப் பொருள் அல்ல!” : ஒன்றிய அரசின் ‘சாந்தி’ மசோதாவைக் கண்டித்த முரசொலி தலையங்கம்!
-
“இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நாகூர் ஹனிபா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
டென்ஷனா இருந்தா... VIBE WITH MKS நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள்: ரூ.289.63 கோடி நிவாரண நிதி அறிவித்த அமைச்சர் MRK பன்னீர்செல்வம்