Tamilnadu

கட்டணமில்லா பேருந்தால் பயன்: “மாதந்தோறும் பெண்களால் இவ்வளவு சேமிக்க முடிகிறது..” - வெளியான ஆய்வு முடிவு !

தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்தே பல நலத்திட்டங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த ஆண்டு மே மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சராக பொறுப்பேற்ற அன்றே கையெழுத்திட்ட திட்டங்களில் மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் முக்கியமாக அமைந்தது. முதலமைச்சர் கையெழுத்திட்ட மறுநாளே இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

சுமார் ஒன்றரை ஆண்டுகளை தாண்டியும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால், பெண்கள் பலரும் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். இப்படி ஒரு மகத்தான திட்டத்தினால், பெண்கள் தங்கள் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்க முடிகிறது. இது பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இந்த திட்டம் தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்திய அரசியலில் ஒரு சிறந்த திட்டமாக கருதப்பட்டு வருவதோடு பல்வேறு மாநிலங்களின் அரசியல் தலைவர்கள் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 39.21 லட்சம் பயணிகள் பயனடைந்துள்ளதாக ஒரு புள்ளி விவரமும் தெரிவிக்கிறது.

இந்த நிலையில் இலவச பேருந்து பயணம் திட்டம் மக்களுக்கு பயன்படுகிறது என்பது குறித்து மாநில திட்டக்குழு ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. தற்போது இது தொடர்பான விவரங்களையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் கீழ், பெண்கள் மாதந்தோறும் சுமார் ரூ.888 சேமித்து வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும் பல்வேறு வகையான பணிக்கு செல்லக்கூடிய பெண்கள் மாதம் 756 ரூபாயிலிருந்து 1012 ரூபாய் வரையிலும் சேமிக்க முடிகிறது.

இந்த திட்டம் மூலம் பயணிக்கக் கூடிய பெண்களில் 48% - 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 52% - 40 வயதிற்கு உட்பட்டவர்கள் ஆகும். மேலும் 40% பெண்கள், குடும்பத்தாரை சார்ந்து இல்லாமல் சுயமாக வேலைக்கு சென்று திரும்ப மகிளிர் இலவச பேருந்து பயண திட்டம் உதவியாக உள்ளது.

அதோடு, வெளியில் செல்லும் பெண்கள் போக்குவரத்து செலவுக்காக குடும்ப உறுப்பினர்களை நம்பியிருக்கும் சூழலும் குறைந்துள்ளது என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. சிறிய நகரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்களின் சராசரி வருவாய் ரூ.12,000க்கும் குறைவாக உள்ள நிலையில், மாதந்தோறும் அவர்கள் சேமிக்கும் 888 ரூபாயை தங்கள் குடும்ப செலவுகளுக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: மதுரை AIIMS: “எப்போ கேட்டாலும் பணி எப்போ தொடங்கும்னு மட்டும் சொல்ல மாட்றாங்க” - சு.வெங்கடேசன் MP தாக்கு !