Tamilnadu

அதிவேகமாக வந்த வாகனம்.. ஸ்கூட்டரில் சென்ற தாய் - மகளுக்கு நேர்ந்த துயரம்: சோகத்தில் மூழ்கிய குடும்பம்!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி விஸ்வலிங்கபுறத்தை சேர்ந்தவர் உமாமகேஷ்வரி. இவர் தனியார் டைப்பிங் இன்ஸ்டிட்யூட்டில் பயிற்சியாளராக உள்ளார். மேலும் இவரது மகள் கிருத்திகா. இவர் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்நிலையில் உமாமகேஷ்வரியும், கிருத்திகாவும் கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். வாகனத்தை மகள் ஓட்டிச் சென்றுள்ளார். இதையடுத்து இவர்களது இருசக்கர வாகனம் தாம்பரம் மார்க்கமாக வண்டலூர் மேம்பால இறக்கத்தில் சென்று கொண்டிருந்தது.

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் தாய் மற்றும் மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் இருவரது உடலையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய நிற்காமல் சென்ற வாகனத்தை போலிஸார் தேடி வருகின்றனர். சாலை விபத்தில் தாய் மற்றும் மகள் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: திருடுபோன 17 சவரன் நகை.. 10 நாட்களில் மீட்ட போலிஸ்: கொள்ளையனை சிக்க வைத்த CCTV!