Tamilnadu

புறக்கணிக்கப்பட்ட அழைப்பு.. ஓடிக்கொண்டிருந்த TV.. VAO வீட்டில் அரசு அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

சென்னை, மடுவங்கரை பகுதியைச் சேர்ந்தவர் சுவாதி பிரகாஷ். 39 வயதான இவர் மணப்பாறை பாரதியார் நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். மருங்காபுரி தாலுகாவில் உள்ள தாதனூர் என்ற கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இன்று அவர் பணிக்கு செல்லாத நிலையில் சக கிராம நிர்வாக அலுவலர்கள் அவரை காலையில் இருந்து தொடர்ந்து அலைபேசியில் தொடர்பு கொண்டு உள்ளனர். ஆனால் அவர் அலைபேசியை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர்கள் அவரைப் பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்ற போது வீடு உள்புறமாக பூட்டி இருந்தது.

நீண்ட நேரம் கூப்பிட்டும் கதவு திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது சுவாதி பிரகாஷ் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.. இதனால் கிராம நிர்வாக அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சம்பவம் பற்றிய தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்த சுவாதி பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சுவாதி பிரகாஷ் மூன்று பக்க கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் ஆரம்ப காலம் முதலே தனக்கு ஒரு மன வியாதி இருப்பதாகவும் அந்த மன வியாதிக்காக பின்னர் மது குடித்ததாகவும் அதனால் யாருக்கும் மரியாதை கொடுக்கவில்லை என்பதுடன் அதிக அளவில் கடன் வாங்கி உள்ளதாகவும் இதனால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாகவும் என்னை மன்னித்து விடுங்கள் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுமட்டுமின்றி சுவாதி பிரகாஷ் வீட்டில் டிவியை ஆன் செய்து வைத்து விட்டே தூக்கில் பிணமாக தொங்கி இருக்கிறார். போலீசார் வந்து உடலை கைப்பற்றும் வரை டிவி ஓடிக்கொண்டே தான் இருந்தது. மேலும் அவரது வாயில் கைகுட்டையும் இருந்தது. இந்த சம்பவம் சக கிராம நிர்வாக அலுவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதுடன் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

Also Read: Computer வேலை.. கம்போடியாவுக்கு அழைத்துச்செல்லப்பட்டு விலைக்கு விற்கப்பட்ட தமிழக இளைஞர் !