Tamilnadu

“என் பெயரை எல்லாரும் பேசணும்” : தனது வீட்டுக்கு தானே பெட்ரோல் குண்டு வீசிய இந்து முன்னணி நிர்வாகி கைது !

கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோவில் தெருவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவ தொடர்பாக துறையினரின் தீவிர விசாரணையில், தனது வீட்டுக்கு தானே பெட்ரோல் குண்டு வீசிய சக்கரபாணியை காவல்துறையினர் கைது செய்தனர்.

தனது பெயர் பரபரப்பாக பேச வேண்டும் என்பதற்காக பெட்ரோல் குண்டு வீசியதாக காவல் துறையினரிடம் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலக்காவேரி காளியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் சக்கரபாணி இந்து முன்னணி அமைப்பின் நகர தலைவராக உள்ளார். இன்று காலை இவரது வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக எழுந்த புகாரினால் பரபரப்பு அதிகமானது.

இதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. காவல்துறையினரின் மோப்பநாய் டபி வரவழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.

இந்நிலையில்சக்கரபாணி மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழவே, இன்று மாலை சக்கரபாணியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காவல்துறையினர் சக்கரபாணியிடம் விசாரணை நடத்தினர்.

இதில் தனது பெயர் பரபரப்பாக பேச வேண்டும் என்பதற்காக தானே தனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் சக்கரபாணியை கைது செய்துள்ளனர். தனது பெயர் பரபரப்பாக பேச வேண்டும் என்பதற்காக தனது வீட்டிற்கு தானே பெட்ரோல் குண்டு வீசி கைது செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Also Read: “ஆரியமாயை புத்தகத்தைக் கண்டு அவ்வளவு அச்சமா?”: இந்துத்வா கும்பலுக்கு 1951லேயே அண்ணா கொடுத்த தரமான பதிலடி!