Tamilnadu

ஓடும் பேருந்தை நிறுத்தி Reels Video எடுத்த 2 இளைஞர்கள்.. அதே இடத்தில் நூதன தண்டனை வழங்கிய போலிஸ்!

இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி இளைஞர்கள் சினிமா பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை வெளிவிட்டு வருகின்றனர். இப்படியான சில வீடியோக்கள் சில நேரங்களில் சர்ச்சை ஏற்படுத்துகிறது. மேலும் ரீல்ஸ் வீடியோ எடுக்கிறேன் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் ஓடும் பேருந்தை நிறுத்தி ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்ட இரண்டு இளைஞர்களுக்கு போலிஸார் நூதன தண்டனை வழங்கியுள்ளனர்.

சென்னையில், பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் ஓடும் பேருந்தை நிறுத்தி இரண்டு இளைஞர்கள் சினிமா பாடலுக்கு நடனமாடி வீடியோவாக பதிவு செய்து அதை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோவை பார்த்தவர்கள், சென்னை காவல்துறைக்கு வீடியோவை இணைத்து புகார் அளித்துள்ளனர். இதையடுத்து வண்ணாரப்பேட்டை போலிஸார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அந்த இளைஞர்களை போலிஸார் கண்டு பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பதும், ரீல்ஸ் வீடியோவிற்காக பேருந்தை நிறுத்தியதும் தெரியவந்தது.

பின்னர் இதேபோன்று பொதுமக்களைப் பாதிக்கும் வகையிலும்,போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான முறையில் வீடியோக்கள் எடுக்கக் கூடாது என இருவருக்கு போலிஸார் எச்சரிக்கை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து க கல்லூரி மாணவர்கள் அபராதம் விதித்து இரண்டு நாட்கள் அதே இடத்தில் போக்குவரத்தைச் சீர் செய்ய வேண்டும் என நூதன தண்டனை வழங்கினர். இதையடுத்து போலிஸார் மேற்பார்வையில் இரண்டு இளைஞர்களும் போக்குவரத்தைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Also Read: கையை சுற்றிய விஷப்பாம்பு.. அதிர்ச்சியில் பாம்மை கடித்து கொலைசெய்த சிறுவன்.. சத்தீஸ்கரில் பரபரப்பு !