Tamilnadu
அவதூறு பேச்சு.. BJP IT Wing தலைவருக்கு ரூ.10 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி நோட்டீஸ்!
மதுபான கொள்முதல், விற்பனையில் கமிசன் பெறுவதாக பேசியதற்காக 10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரி தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல்குமாருக்கு தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு தலைவராக உள்ள சி.டி.ஆர்.நிர்மல்குமார் அண்மையில் விகடன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் டாஸ்மாக் மதுபான கொள்முதல் குறித்தும், விற்பனை குறித்தும் பேசியிருந்தார்.
அதில் துறையின் அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி கமிசன் பெறுவதாக பேசியிருந்தார். மேலும், காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகவும், இதற்கும் அமைச்சருக்கும் தொடர்பு இருப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்திலும் நிர்மல்குமார் பதிவிட்டிருந்தார்.
நிர்மல்குமாரின் கருத்து எவ்வித அடிப்படை ஆதாரம் இல்லாமலும், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாக கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பாக வழக்கறிஞர் ரிச்சர்டான் வில்சன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதில், சம்பந்தப்பட்ட ட்விட்டர் பதிவை நீக்க வேண்டுமெனவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும், மான நஷ்ட ஈடாக 10 கோடி ரூபாய் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இவற்றை ஒரு வாரத்தில் செய்ய தவறினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், பதிவுகளை நீக்கும்படி யூடியூப் மற்றும் டிவிட்டர் நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Also Read
-
ஒரு திட்டம் நாட்டிற்காக வரும்போது, அரசியல் செய்யக்கூடாது : விஜய் அறிவிப்புக்கு தங்கம் தென்னரசு எதிர்ப்பு!
-
“த.வெ.க. அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு என்பது கனவுகளைத் தகர்க்கும் பேரிடி!” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“பேசவிடு! பேசவிடு! உண்மையை பேசவிடு!” : சட்டமன்றத்தில் பேச அனுமதி மறுத்ததால் தி.மு.க வெளிநடப்பு!
-
பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்! - கனிமொழி கண்டனம்!
-
ஒவ்வொரு தொண்டரும் ஒரு நிர்வாகி ; உடன்பிறப்புகள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த மாற்றம் : முரசொலி!