Tamilnadu

“கறுப்புப் பணம் ஒழிப்பு.. நாட்டில் கள்ள நோட்டே இருக்காது என்று பிரதமர் மோடி சொன்னது என்னாச்சு?”: முரசொலி!

பண மதிப்பு நீக்க மர்மம்!

2016 ஆம் ஆண்டு நவம்பர் 6 நள்ளிரவில் ‘இந்தியாவுக்கு இரண்டாவது சுதந்திரம்’ வாங்கிக் கொடுத்தார் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள். அப்படித்தான் அன்று அதனைச் சொன்னார்கள்.

‘500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது’ என்று அறிவித்தார் பிரதமர். கையில் பணமில்லாமல் ரோட்டில் அலைந்தார்கள் மக்கள். கையில் 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்க இரண்டு மாதங்கள் ஆகின. இப்படி அறிவித்ததன் மர்மம் இன்றுவரை அவிழவில்லை. ஆறு ஆண்டுகள் கழித்து உச்சநீதிமன்றம் இது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறது. மர்மம் முற்றிலுமாக அவிழுமா எனத் தெரியவில்லை!

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. ஒன்றிய அரசின் இந்நடவடிக்கையில் சட்டப் பிழைகள் உள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியதால், அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு இந்த வழக்குகள் அனைத்தும் மாற்றப்பட்டன.

உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த விசாரணையை பா.ஜ.க. அரசு விரும்பவில்லை.

‘’ இதுபோன்ற வழக்குகளை அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கத் தேவையில்லை. தனிநபர்களின் பாதிப்புக்கு நிர்வாக ரீதியாக தீர்வு காணலாம்” என ஒன்றிய அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் சொன்னார்.

தனிப்பட்ட ஒரு மனிதன் பாதிக்கப்படவில்லை, 100 கோடி பேரும் பாதிக்கப்பட்ட விவகாரம் இது என்பதை ஆறு ஆண்டுகள் கழித்தும் பா.ஜ.க. அரசு புரிந்துகொள்ளவில்லை. மனுதாரர்கள் சார்பாக ஒன்றிய நிதித்துறையின் முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் வாதிட்டுள்ளார்.

‘’1978ஆ-ம் ஆண்டும் சிறிய அளவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு தனிச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் தற்போது அத்தகைய நடைமுறை பின்பற்றப்படவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னதாக பல்வேறுகட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2016-ல் இது பின்பற்றப்படவும் இல்லை” என்று வாதிட்டார் ப.சிதம்பரம்.

அனைத்துத் தரப்பு விசாரணைகளின் பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘’அரசின் கொள்கை முடிவுகளை ஆய்வு செய்யும் வழக்குகளில் ‘லட்சுமண ரேகை’ என்ன என்பது எங்களுக்குத் தெரியும். ரூ500, ரூ1,000 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களை இந்திய அரசு தயாராக வைத்திருக்க வேண்டும். ரிசர்வ் வங்கி இது தொடர்பாக நடத்திய ஆய்வுகள் உள்ளிட்டவைகளையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இவ்வழக்கு விசாரணை நவம்பர் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்றனர்.

பண மதிப்பிழப்பு நீக்கத்துக்கான உண்மையான காரணத்தைச் சொல்லியாக வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது பா.ஜ.க. அரசு.

2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் நாள் நள்ளிரவில் இது அறிவிக்கப்பட்டது. இது இந்தியாவின் இரண்டாவது சுதந்திர தினமாகச் சொல்லப்பட்டது. கருப்புப் பணத்தை ஒழிக்கவும் , ஹவாலாவை ஒழிக்கவும், கள்ள நோட்டுகளைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை என்று சொல்லப்பட்டது. இந்தப் பணம் தான் போதை மருந்து வியாபாரத்துக்கும் தீவிரவாதத்துக்கும் பயன்படுத்தப்படுவதாகச் சொல்லப்பட்டது. எட்டு ஆண்டுகளில் கருப்புப் பணத்தை, ஹவாலாவை, கள்ள நோட்டுகளை, போதைமருந்துகளை ஒழித்துவிட்டதாகச் சொல்ல முடியுமா?

2017 - முதல் இன்றுவரை குஜராத் துறைமுகங்களில் கைப்பற்றப்பட்ட போதை மருந்துகளின் மதிப்பே பல்லாயிரம் கோடி ஆகும். உலகின் மிகப்பெரிய ஓபியம் உற்பத்தி யாளர்களால் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் குஜராத் வழியாக வருகிறது. ஆப்கானிஸ்தானில் தயாராகும் ஹெராயின்கள், இந்தியப் பெருங்கடல் வழியாக கிழக்கு மற்றும் தெற்கு ஆப்ரிக்காவுக்குக் கடத்தப்படுவதாக ஐ.நா.வின் போதைப் பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகம் கூறுகிறது. சமீப காலமாக குஜராத் துறைமுகங்களைப் பயன்படுத்தி போதைப் பொருள்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் வடமாநிலங்களில் 300 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

கள்ளநோட்டாவது, ஒழிந்துள்ளதா என்றால் அதுவும் இல்லை. கடந்த 2021-ஆம் ஆண்டு மட்டும் சுமார் 21 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாகவும், இதிலும் குறிப்பாக 2000 ரூபாய் நோட்டுகள் மட்டும் 12 கோடி ரூபாய் என்றும், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த ஆண்டு 20.39 கோடி மதிப்புடைய கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் போலி 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் மட்டும் ரூ.12.18 கோடியாகும். அதாவது கிட்டத்தட்ட 60 சதவீதத்திற்கும் மேலானவை 2 ஆயிரம் ரூபாய் தாள்களே ஆகும். 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகே கள்ள நோட்டுகள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

2016 ஆம் ஆண்டு ரூ.15.92 கோடி மதிப்புடைய கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2017, 2018, 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் முறையே ரூ.28.10 கோடி, ரூ.17.95 கோடி, ரூ.25.39 கோடி, ரூ.92.17 கோடி மற்றும் 20.39 கோடி மதிப்புடைய கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டு அதாவது பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பாக ரூ.15.49 கோடி போலி ரூபாய் தாள்கள் கைப்பற்றப்பட்டன. 2021 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுகளில் 500 ரூபாய் தாள்கள் ரூ.6.6 கோடி மதிப்புக்கும், ரூ. 200 தாள்கள் 45 லட்சம் மதிப்புக்கும் கைப்பற்றப்பட்டன.

கள்ளநோட்டுக்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிப்பதற்காகவே புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு வெளியிடப் பட்டதாக அரசு கூறும் நிலையில், தற்போது தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகளில், கள்ளநோட்டுகளில் அதிகம் அச்சிடப்பட்டது 2,000 ரூபாய் நோட்டுகள்தான். இது எதனைக் காட்டுகிறது?

குஜராத் மாநிலத்தில் இருந்து சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது. குஜராத்தில் ரூ.317 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது தான் அந்தச் செய்தி. இதை கூரியர் நிறுவனம் மூலமாக பட்டுவாடா செய்ய முயன்ற கும்பல் கைதுசெய்யப்பட்டுள்ளது. அப்படியானால், நாட்டில் கள்ள நோட்டே இருக்காது என்று 2016 ஆம் ஆண்டு நள்ளிரவில் சொன்னது என்னாச்சு?

கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவந்து தருவதாகச் சொன்ன பிரதமர், எட்டு ஆண்டுகள் ஆனபிறகும் மீட்டுக் கொண்டு வந்து தரவில்லை. ஊழலைப் பற்றி இன்னமும் பேசிக்கொண்டு தான் இருக்கிறார். அப்படியானால், கறுப்புப் பணம் ஒழிப்புகுறித்து 2016 நள்ளிரவில் சொன்னது என்னாச்சு?

விடிஞ்சா பேச்சு… காற்றோடு போச்சு?!

Also Read: "இந்திய பொருளாதாரத்தை பாதாளத்துக்கு தள்ளிவிட்டு எந்த கூச்சமும் இல்லாமல் இருக்கும் BJP": முரசொலி தாக்கு!