Tamilnadu

ஸ்டார்ட் செய்தபோது பற்றி எரிந்த மின்சார ஸ்கூட்டர்.. பதறியடித்து ஓடிய உரிமையாளர்!

உலகம் முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கூட மின்சார வாகனங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் மக்கள் மின்சார வாகனங்களின் பக்கம் திரும்பியுள்ளனர்.

இதனால் பிரபலமான நிறுவனங்களும் மின்சார பைக், கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் மின்சார பைக் மற்றும் கார்கள் தீப்பிடித்து எரியும் சம்பவம் தொடர் கதையாகவே இருந்து வருகிறது. இதற்கான தீர்வையும் நிறுவனங்களால் இன்னும் எட்டமுடியவில்லை.

மின்சார வாகனங்களை வாங்கும் உரிமையாளர்களின் உயிர்கள் மீது விளையாடக்கூடாது என தயாரிப்பு நிறுவனங்களுக்கு எச்சரிக்கை செய்து தரமான வாகனங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகிறது. மேலும் பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் வாகனங்களைத் திரும்பப் பெற்றுக் கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளது.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் மின்சார ஸ்கூட்டர் தீ பிடித்து எரிந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன். இவர் மின்சார ஸ்கூட்டரை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார்.

இதையடுத்து, வழக்கம்போல் மின்சார ஸ்கூட்டரை வீட்டில் சார்ஜ் போட்டுள்ளார். பிறகு வேலைக்குச் செல்வதற்காக வாகனத்தை ஸ்டார்ட் செய்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: சட்னியில் வெந்து கிடந்த பல்லி.. பிரபல ஹோட்டலில் டிபன் சாப்பிட்டவர்கள் அதிர்ச்சி!