Tamilnadu

ஒரு புகார்.. உடனே நிறைவேற்றிய 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்': இணையத்தில் வைரலாகும் பதிவு!

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு, சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

பின்னர் இதன் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. பின்னர் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தை விரிவு படுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும் இணைய வழியிலும் புகார்கள் தெரிவிக்கும் படியும் இந்த திட்டம் மேம்படுத்தப்பட்டது.

இதையடுத்து பொதுமக்கள் பலரும் நேரடியாகவே 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' புகார்களை கொடுத்து வருகின்றனர். இப்படிக் கொடுக்கும் புகார்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டு அவர்களிடமே இது உரிய முறையில் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தால் பயனடைந்த பாலாஜி லட்சுமிபதி என்பவர் தி.மு.க அரசின் இந்த திட்டத்தைப் பாராட்டி தனது அனுபவத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலகி வருகிறது.

அவரின் அந்த பதிவில், "ஒரு மாசத்துக்கு முன்னாடி CM செல்லுல ஒரு புகார் கொடுத்து இருந்தேன். கொஞ்சம் சிக்கலான புகார். இதை எப்படி பார்க்கப்போறாங்க என்ன பண்ணுவாங்கன்னு ஒரு கேள்வியும் இருந்தது. இப்போ அந்த புகார் என்னனு சொல்றேன்.

புகார்:

சுண்ணாம்பு கொளத்துர் சிக்னல கடக்கும் பிரச்னை தான் அது. அந்த சிக்னல் ல உள்ள சாலையை மழைநீர் வடிகாலுக்காக பராமரிச்சு கொண்டு இருக்காங்க. அதனால நேரா போக முடியாம சுத்திட்டு போகணும்.

இந்த சிக்னலோட மிக பெரிய பிரச்சனை, எவனும் இந்த சிக்னல் ல வண்டியை நிறுத்தமாட்டான். சிகப்பு எரிஞ்சாலும் சின்ன சிக்னல் தானன்னு நிறுத்தாம வேகமா போவாங்க.

காலையில பையன ஸ்கூல் ல விட போறப்ப இது பெரிய பிரச்னை. கிறீன் சிக்னல் போட்டு க்ராஸ் பண்ண போனாலும் சில மாநகர பேருந்துகள் நம்மல மறிச்சு புகுந்து போகும். இதை அப்படியே ஒரு புகார் ல தேதி வாரியா நேரம் வாரிய கொடுத்து இருந்தேன்.

கடந்த 2 வாரமா எனக்கு 3 அழைப்புகள் வந்தது.

அழைப்பு 1: போக்கு.கா.து.

நேரடியாக இதை டெபுடி கமிஷனருக்கு அனுப்பி, அந்த சிக்னல் ல ஒரு போக்குவரத்து காவலாளர போடுறோம்னு வாக்குறுதி கொடுத்தாங்க.

அழைப்பு 2: நெடுஞ்சாலை துறை

அந்த பால வேலைகள் இந்த செப்டெம்பர் மாதத்திற்குள் முடிஞ்சு திறக்கப்படும் ன்னு சொல்லி இருந்தாங்க. இன்று அக்டோபர் 8, அந்த பாலத்தின் வழியாக சென்று வந்தேன்.

அழைப்பு 3: மாநகர போக்குவரத்து கழகம்

சிக்னல் ல நிற்காமல் போன தடம் எண் 91 பேருந்துகள் மேல் நடவடிக்கை எடுப்போம், அந்த சிக்னல் ல 91 தட எண் பேருந்துகள் நின்னு போகும்ன்னு சொல்லி வைத்தார்கள்.

இது அங்க வந்த லட்சத்துல ஒரு பிரச்சனையாக இருக்கலாம். ஆனா காலையில ஸ்கூலுக்கு போற எத்தனையோ பெற்றோர் கொஞ்சம் நிம்மதியா அந்த சிக்னல க்ராஸ் பண்ணுவாங்க.

பி.கு: ஒரு மாசத்துக்கு முன்ன, ஒரு பெட்ரோல் பங்க் ல பெட்ரோல் விற்பதுல சில முறைகேடுன்னு Public Grievance புகார் ஒன்னு எழுப்பி இருந்தேன். அதுவும் அந்த பகுதி கீழ்கட்டளை காவல் நிலையம் வழியா சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா காவல் துறையில் இருந்து அழைப்பு வந்தது.

உங்கள் தொகுதியில் முதல்வர் செயலியை தரவிறக்கம் செய்யுங்கள். சில பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க கருவியாக பயன்படுத்துங்கள்" என தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி தி.மு.க அரசை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Also Read: “முதல்வர் மு.க.ஸ்டாலின் கழகத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்”: இன்று பொதுக் குழு கூடுகிறது!