Tamilnadu
பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்.. 3 வாரங்களுக்கு நூதன தண்டனை வழங்கிய நீதிமன்றம்: அது என்ன தெரியுமா?
இளைஞர்கள் பலர் அதிவேகமாக பைக் ஓட்டி சாகத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் சாலையில் செல்லும் மற்றவர்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது. மேலும் இவர்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறுகிறது.
இந்த பைக் சாகசங்களை போலிஸார் தொடர்ச்சியாகக் கண்காணித்துத் தடித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், இப்படியான சம்பவங்கள் தொடரவே செய்கின்றன.
இந்நிலையில், பைக் சாகசம் செய்த இளைஞருக்கு, விழிப்புணர்வு துண்டு பிரசரங்களை வழங்க வேண்டும் எனவும் மருத்துவமனையில் வார்டு பாயாகப் பணி செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு தண்டனை வழங்கியுள்ளது அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.
சென்னை அண்ணா சாலையில் கடந்த மாதம் 8ம் தேதி ஹைதராபாத்தைச் சேர்ந்த கோட்லாக் அலெக்ஸ் பினோய் என்ற இளைஞர் பைக்கில் அதிவேகமாக ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த சம்பவம் தொடர்பாக பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலிஸார் வழக்குப் பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். இதில் முக்கியமாகச் சாகசத்தில் ஈடுபட்ட ஐதராபாத்தை சேர்ந்த அலெக்ஸ் பினோய் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி ஜாமீன் கோரினார்.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் கோட்லாக் அலெக்ஸ் பினோய்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதாவது 3 வாரங்களுக்கு, தேனாம்பேட்டை போக்குவரத்து சிக்னலில் போக்குவரத்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்க வேண்டும்.
அதாவது வாரத்தின் முதல் வேலை நாளான திங்கட்கிழமை காலை மாலை என இரண்டு வேளை வாகன ஓட்டிகளுக்குத் துண்டுப் பிரசுரங்களை வழங்க வேண்டும். மேலும் செவ்வாய்க்கிழமை முதல் சனிக்கிழமை வரை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் வார்டு பாயாக பணியாற்ற வேண்டும் என என்ற நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கப்பட்டது
அதன் அடிப்படையில் நேற்று தேனாம்பேட்டை சிக்னலில் காலை மாலை என இரண்டு வேளையும் போக்குவரத்து விதிகள் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு கோட்லாக் அலெக்ஸ் பினோய் வழங்கினார்.
இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் கோட்லாக் அலெக்ஸ் பினோய் வார்டு பாயாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தின் இந்த தண்டனை அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.
Also Read
-
“அணுசக்தி என்பது வணிகப் பொருள் அல்ல!” : ஒன்றிய அரசின் ‘சாந்தி’ மசோதாவைக் கண்டித்த முரசொலி தலையங்கம்!
-
“இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நாகூர் ஹனிபா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
டென்ஷனா இருந்தா... VIBE WITH MKS நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள்: ரூ.289.63 கோடி நிவாரண நிதி அறிவித்த அமைச்சர் MRK பன்னீர்செல்வம்
-
போராட்டம் வாபஸ் - 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!