Tamilnadu

சாலையில் மாடுகள் சுற்றி திரிந்தால் ரூ.3000 அபராதம்.. உரிமையாளர்களை எச்சரித்த சென்னை மாநகராட்சி!

சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சி பொது சுகாதாரத்துறையினரால் கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.

அவ்வாறு தெருக்களில் சுற்றித்திரிந்து மாநகராட்சியால் பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதத் தொகையாக மாடு ஒன்றிற்கு 1250 ரூபாய் அபராத தொகை, 100 ரூபாய் ஒரு நாள் விகிதம் 300 ரூபாய் பராமரிப்பு பணி என மொத்தமாக ரூ.1,550/- விதிக்கப்பட்டு வந்தது.

2021 ஜூலை 7ஆம் தேதி முதல் 2022 ஜூன் 30-ஆம் தேதி வரை மொத்தமாக 4099 மாடுகள் பிடிக்கப்பட்டு 61 லட்சத்து 63 ஆயிரத்து 750 ரூபாய் அபராதமாக இதுவரை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த அபராதம் ஆனது ரூ.1550 முதல் ரூ.3000 ஆக மாநகராட்சி உயர்த்தி உள்ளது. இனி வரும் காலங்களில் மாடு பிடிபட்டால் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு அந்த மாட்டின் காதில் மாநகராட்சி வரிசை எண் பொருத்தப்படும். அதே மாடு மீண்டும் பிடிக்கப்பட்டால் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் உரிய முறையில் ஒப்படைக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Also Read: “RSS ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு : சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்” - தமிழ்நாடு அரசு விளக்கம்!