Tamilnadu

”கொடநாடு வழக்கு.. விரைவில் வெளியாகப்போகும் பழனிசாமியின் உண்மை முகம்”: ஆர்.எஸ்.பாரதி பதிலடி!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " எடப்பாடி பழனிசாமி போராட்டம் என்ற பெயரில் தன்னுடைய வயிற்று எரிச்சலை வெளிப்படுத்தும் வகையில் பேசியுள்ள்ளார். யாரோ ஒருவர் எழுதிக் கொடுத்ததை பழனிசாமி பேசுகிறார்.

15 மாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியை மக்களின் செல்வாக்கை பொறுத்துக் கொள்ளாமல் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு வீண் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.

கொடநாடு வழக்கில் பல திடுக்கிடும் சம்பவங்கள் நடந்துள்ளது. மேலும் வழக்கு துரிதமான நடைபெற்று வருகிறது. இதனால் பழனிசாமி போராட்டங்களை நடத்தி பொய் புகார்களை தெரிவித்து வழக்கை திசைதிருப்பப் பார்க்கிறார்.

சொத்து வரி கூட்டியது தொடர்பாக எடப்பாடி பேசி உள்ளார். இதற்கு யார் காரணம் என்பதை தொடர்பாக சட்ட சபையில் எதிர்க்கட்சி முன்னிலையிலே முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியுள்ளார். அப்போது எழுந்து எதுவும் பேசாமல் இருந்துவிட்டு இப்போது போராட்டம் நடத்துகிறார்.

அ.தி.மு.க-வின் ஒவ்வொரு அமைச்சர்களும் எலிசபெத் மகாராணியின் வீட்டை விட பெரிதாக கட்டியுள்ளனர். எலிசபெத் மகாராணியின் பக்கிங் காம் வீட்டை பார்ப்பது போல் உள்ளது விஜயபாஸ்கர் வீடு. இன்னும் சில நாட்களில் பழனிசாமியைப் பற்றிய உண்மையான முகம் வெளிவர உள்ளது.

தி.மு.கவின் 15 மாத ஆட்சி காலத்திலும் அ.தி.மு.க-வின் ஆட்சிக்காலத்திலும் எத்தனை கொலை கொள்ளைகள் நடந்துள்ளது என்பது பற்றி விவாதிக்க தயாரா?. ஒன்றிய அரசுடன் இணக்கமாக உள்ள அ.தி.மு.க ஆன்லைன் ரம்மி தடை செய்ய சொல்லி ஏன் கேட்கவில்லை.

தி.மு.க ஆட்சியில் நான்கு தலைமை இருப்பதாக பழனிசாமி கூறுகிறார். ஆனால் அதிமுகாவில்தான் இ.பி.எஸ், ஓ.பி.எஸ், சசிகலா, டி.டி. வி தினகரன் ஆகிய நான்கு பேர் உள்ளனர். இவர்களை மனதில் வைத்துதான் பழனிசாமி பேசியிருக்கிறார். இவர்கள் நான்கு பேருக்குள் தான் கட்சியை யார் கைப்பற்றுவது என்ற பிரச்சனை உள்ளது” என தெரிவித்துள்ளார்.

Also Read: 'விரைவில் போலி பத்திரப் பதிவுகளை ரத்து செய்யும் சட்டம்'.. அமைச்சர் மூர்த்தி கூறிய முக்கிய தகவல் இங்கே!