Tamilnadu

எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான 26 இடங்களில் ரெய்டு - கைது நடவடிக்கைக்குத் தயாராகும் லஞ்ச ஒழிப்புத்துறை?

தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.சி.வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனைகளில் கணக்கில் வராத பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கின.

இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முழுவதும் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியனர்.

மேலும் கணக்கில் வராத ரூ. 13 லட்சம், 2 கோடி வைப்புத்தொகை ஆவணங்கள், வங்கி லாக்கர் சாவி உள்ளிட்டவற்றை போலிஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மீண்டும் இன்று காலையிலிருந்தே எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொண்டாமத்தூர் சட்டமன்ற உறுப்பினராக உள்ள எஸ்.பி.வேலுமணி முன்னால் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபோது, கிராமப்புரங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் மேற்கொண்ட பணிகளுக்கான ஒப்பந்தங்களின் போது மிகப் பெரிய அளவில் முறைகேடு செய்து, தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக ஒப்பந்தப்பணி வழங்கியுள்ளார்.

இதனால் அரசுக்கு சுமார் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அது சம்மந்தமான ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 10 இடங்களிலும், கோயம்பத்தூரில் 9 இடங்களிலும், திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய நகரங்களில் 7 இடங்களிலும் ஆகமொத்தம் 26 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Also Read: 5 வருடத்தில் ₹58,23 கோடி.. 3,928% வருமானத்தை விட அதிகமாக சொத்து சேர்த்த வேலுமணி: அதிரவைக்கும் FIR தகவல் !