Tamilnadu

59 சவரன் தங்க, வைர நகைகள் கொள்ளை.. திருட்டு வண்டியால் மாட்டிய கும்பல்.. சினிமா பாணியில் நடந்த சம்பவம் !

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 62). ஓய்வுபெற்ற CISF துணை ஆணையாளரான இவர், கடந்த மாதம் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். பிறகு வீடு திரும்பிய போது, தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அவர் பீரோவில் வைத்திருந்த 59 சவரன் தங்க நகைகள், 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இது குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். வழக்குப்பதிவு செய்த அவர்கள், விசாரணை மேற்கொண்டனர். அப்போது இதை செய்தது வில்லிவாக்கம், கொடுங்கையூர் பகுதிகளை சேர்ந்த சிவவிநாயகம், உலகநாதன் என்று தெரியவந்தது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து காவல் அதிகாரி கூறுகையில், "முதியவர் கொடுத்த புகாரின் பேரில் நாங்கள் தீவிரமாக விசாரித்தோம். அப்போது அவர்கள் வீட்டின் அருகாமையில் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்தபோது, கொள்ளையடித்து விட்டு ஒரு பைக்கில் தப்பி சென்றனர். அந்த பைக் நம்பரை சோதனை செய்தபோது அது திருட்டு பைக் என்று தெரியவந்தது.

சிறிது தூரம் சென்ற பிறகு, அந்த பைக்கில் இறங்கிய ஒருவர் மற்றொரு பைக்கில் சென்றார். நாங்கள் இரு வாகனத்தையுமே சுமார் 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி மூலம் கண்காணித்தோம். அப்போது அவர்கள் 1 மணி நேரத்திற்கு ஒரு முறை சட்டைகளை மாற்றிக்கொண்டே இருந்தனர். இருப்பினும் அவர்கள் பைக்கின் நம்பரை வைத்து கண்டுபிடித்தோம்.

அப்போது அந்த கொள்ளையர்கள் வில்லிவாக்கத்தை சேர்ந்த சிவவிநாயகம், உலகநாதன் என்று தெரியவந்தது. பின்னர் அவர்களை பிடித்து விசாரித்ததில், அவர்கள் கொள்ளையடித்த பொருட்களை நித்யா என்ற பெண்ணிடம் கொடுத்து வைத்தது தெரியவந்தது. பின்னர் அவரையும் கைது செய்த அதிகாரிகள் அவர்களிடமிருந்த நகைகளை மீட்டனர்.

மேலும் விசாரிக்கையில், அவர்கள் மேல் ஏற்கனவே திருட்டு வழக்குகள் இருந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரையும் கைது செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.

Also Read: வீட்டு செலவுக்கு பணம் கேட்டதால் ஆத்திரம்.. மனைவியை கொலை செய்த கோடூர கணவர்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி !