Tamilnadu

"குஜராத் மாடலை விட திராவிட மாடல் தான் இந்தியாவிற்கே முன்மாதிரி" - அமைச்சர் PTR நேரடி தாக்கு !

மதுரையில் தமிழ்ச்சங்க அரங்கில் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான சங்கம் நிகழ்கை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று விருதாளர்களை கெளரவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்களை செயலாக்குவதன் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் வளர்ச்சியடைய வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாக கூறினார்.

தொடர்ந்து பேசியதாவது, "தங்கம், ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீடு செய்வது மட்டும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது. அரசால் செய்ய முடியாத தொழில் வளர்ச்சியை தொழில் முனைவோர்களால் தான் செய்ய முடியும். 'நான் முதல்வன்' போன்ற திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கான தனி திறமையை பள்ளிப் பருவத்தில் இருந்தே உருவாக்க முடியும்.

எஸ்.சி, எஸ்.டி ஆணையத்திற்கு நிதியும், பணியாளர்களும் நியமிக்க முதலமைச்சர் உத்தரவிட்டதன் பின்னர், அதற்கு தேவையான நிதியை ஒதுக்கி, 60 அலுவலர்களுடன் இயங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

gujarat model

மேலும் "குஜராத் மாடல் ஆட்சியில் அந்த மாநிலத்தின் வருவாய் தமிழ்நாட்டின் வருவாயைவிட சில ஆயிரங்கள் அதிகம் இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் 1000 பேருக்கு 4 மருத்துவர்கள் வீதம் இருக்கிறார்கள், குஜராத்தில் 1000 பேருக்கு 1 மருத்துவர் தான் இருக்கிறார்.

இங்கு 80% பெண்கள் உயர்கல்வி பயில்கின்றனர். ஆனால் குஜராத்தில் வெறும் 60%க்கும் குறைவாகவே உயர்கல்வி பயில்கின்றனர். எனவே, திராவிட மாடல் ஆட்சியின் மூலம் தமிழ்நாடு அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக விளங்குகிறது" என்று பெருமிதத்தோடு கூறினார்.

அதோடு, "கடந்த 8 ஆண்டுகளாக தமிழ்நாடு, பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தது. தற்போது இரண்டு ஆண்டுகளாக மிக சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. மதுரையில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலான முக்கியமான முதலீட்டு திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. 18 முதல் 24 மாதங்களில் மதுரையின் முகமே மாறும்" என்று தெரிவித்தார்.

Also Read: "மண்டை மேல இருக்கும் கொண்டையை மறந்துட்டீங்க "-போலிக்கணக்கை வைத்து PTR-ஐ விமர்சித்து மாட்டிகொண்ட பாஜக!