Tamilnadu
மதுரை மாணவனுக்கு லட்ச தீவில் தேர்வு மையம்.. -தேர்வெழுத கடல் தாண்டி பயணிக்க வேண்டுமா என மதுரை MP கேள்வி !
மத்தியப் பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 30 ம் தேதி நடைபெறுகிறது. இந்த நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில், திருவாரூரில் இருக்கும் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு விண்ணப்பித்த மதுரையை சேர்ந்த தமிழக மாணவருக்கு லட்சத் தீவில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வு நடைபெறும் இரண்டு நாட்களுக்கு முன்னரே இதுகுறித்த தகவல் அந்த மாணவருக்கு வந்ததால் அந்த மாணவர் மற்றும் அவரின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்து மதுரை எம்.பி சு.வெங்கிடேசனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது முகநூல் பதிவில் கருத்து பதிவிட்ட அவர், "மதுரை மாணவருக்கு லட்சத்தீவில் தேர்வு மையமா?நுழைவுத்தேர்வுக்கு அலைகடல் தாண்டி பயணப்பட வேண்டுமா?
மத்தியப் பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 30, 2022 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருப்பது ஒரு மத்திய பல்கலை கழகம். திருவாரூரில்... அதற்கு விண்ணப்பித்த மாணவர் ஒருவருக்கு தேர்வு மையத்திற்கான அனுமதி சீட்டு இரண்டு நாட்களுக்கு முன்புதான் வந்துள்ளது. அவர் மதுரைக்காரர். பிரித்துப் பார்த்த அவரது தந்தைக்கு அதிர்ச்சி. தேர்வு மையம் லட்சத் தீவில்... எப்படி மாணவர் போவார். கப்பலில் அல்லது விமானத்தில்... இப்படி ஒரு வாரம் கூட அவகாசம் தராமல் பயணத்திற்கு டிக்கெட் வாங்குவது என்றால் எவ்வளவு செலவு. விமானத்திற்கு நாளுக்கு நாள் கட்டணம் ஏறும். இதில் அனுமதிச் சீட்டோடு வந்துள்ள அறிவுரை சீட்டில் ஒரு நாள் முன்பாகவே வந்து மையத்தைப் பார்த்துக் கொள்ளுங்க என்று ஆலோசனை வேறு.
மாணவரின் தந்தை பதறிப் போய் வந்தார். இவரைப் போல எத்தனை மாணவர்களோ, பெற்றோர்களோ... ஏழை, நடுத்தர குடும்பங்கள் என்ன செய்யும்? மன உளைச்சல்... பணத்திற்கும் அலைச்சல்...
உயர் கல்வி செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இது போன்ற மாணவர்களுக்கு மையத்தை மாற்றுங்கள் என்று...தேர்ச்சி பெறுவதை விட தேர்வு மையத்துக்கு சென்று சேர்வது கடினம் என்ற நிலையை உருவாக்காதீர்கள்." என்று கூறியுள்ளார்.
Also Read
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!
-
“நீங்கள் தான் தமிழ்நாட்டை தொடர்ந்து ஆள வேண்டும்” : முதலமைச்சரிடம் நெகிழ்ந்து பேசிய பொதுமக்கள் !