Tamilnadu

பிரியாணியில் கெட்டுப்போன கறி.. பணம் பறிக்க பொய் குற்றச்சாட்டு - பிரபல உணவகம் விளக்கம்: உண்மை என்ன?

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பிரபல தனியார் உணவகம் ஒன்று உள்ளது. இங்கு விருகம்பாக்கத்தை சேர்ந்த கார்த்தி என்பவர் தனது மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் நேற்று இரவு உணவு சாப்பிட வந்துள்ளார்.

பின்னர் கார்த்தி, சிக்கன் பிரியாணி, ஆட்டுக்கால் சூப், இட்லி, கலக்கி உள்ளிட்ட உணவுப் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். பிறகு அவர்களுக்கு வந்த சிக்கன் பிரியாணியில் கெட்டுப்போன இறைச்சி இருந்துள்ளது. இதையடுத்து கார்த்தி உணவக நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். பின்னர் அவர்கள் வேறு பிரியாணி கொடுப்பதாகக் கூறியுள்ளனர்.

மேலும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமாக இருக்கிறதா என உறுதி செய்யாமல் கொடுக்கலாமா?. இந்த உணவை தங்கள் 2 வயது குழந்தை சாப்பிட்டிருந்தால் என்னவாகி இருக்கும் எனவும் கார்த்தி கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் அங்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பிறகு அங்கு வந்த போலிஸார் பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பிவைத்துள்ளனர்.

இந்நிலையில், இக்குற்றச்சாட்டுக்கு உணவக நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள் முழு உணவையும் சாப்பிட்டுவிட்டு, உணவு கெட்டுப்போயுள்ளதாகக் கூறி தகராறு செய்தனர். மேலும் ரூ.1.50 லட்சம் பணம் கேட்டும் அவர்கள் மிரட்டல் விடுத்தனர் என உணவக நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.

மேலும் 2 ஊழியர்களைத் தாக்கப்படும் சி.சி.டி.வி காட்சிகளையும் உணவக நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதையடுத்து இந்த சம்பவத்தின் உண்மை என்ன என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: பணி நியமனம் கோரி போராடிய ஆசிரியரை லத்தியால் கொடுரமாக தாக்கிய ஆட்சியர்.. பீகாரில் அதிர்ச்சி!