Tamilnadu

"பீகாரி கட்டும் வரி ரூ.2,000, அதே தமிழன் கட்டும் வரி ரூ.13,000 "-வைரலாகும் பொருளாதார நிபுணரின் ட்வீட்!

உத்தர பிரதேச மாநிலம், புந்தேல் கண்ட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, இலவத் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து இலவச திட்டங்கள் குறித்த விவாதங்கள் பொதுவெளியில் எழுந்தன.

மோடியின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், "பொதுமக்களுக்கான சமூக நலத்திட்டங்களை இலவசம் என்று ஒரு குறுகிய அடைப்புக்குள் அடக்கிடாமல், கிராமப்புற ஏழை எளிய மக்களிடையே நடைபெற்றுள்ள பொருளாதாரப் புரட்சி என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.

அதன்பின்னர் இலவசம் குறித்து ஆங்கில ஊடகத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்தது. அதன்பின்னர் தனியார் ஊடகம் ஒன்றில் நடைபெற்ற விவாதத்தில் பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் கலந்துகொண்டு இலவசங்கள் கொடுக்கும் தமிழ்நாடு குஜராத், உத்தரபிரதேசம் போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களை விட பெரிய அளவில் உயர்ந்துள்ளது எனக் கூறினார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் DATA ANALYTICS DEPARTMENT பிரிவின் தலைவரும் பொருளாதார நிபுணருமான பிரவீன் சக்ரவர்த்தி ட்விட்டரில் இலவச திட்டங்கள் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், கடந்த 1965-ல் தமிழ்நாட்டில் தனிநபரின் சராசரி வருமானம் 400 ரூபாயாக இருந்தது. அதே ஆண்டில் பீகாரில் தனிநபரின் சராசரி வருமானம் 350 ரூபாயாக இருந்தது.

அதுபோல 2020-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் தனிநபரின் சராசரி வருமானம் ரூ.2.25 லட்சமாக இருக்கும் நிலையில், பீகாரில் தனிநபரின் சராசரி வருமானம் ரூ.46,000-ஆக மட்டுமே இருக்கிறது. இது தவிர ஒன்றிய அரசுக்கு ஒரு தனிப்பட்ட பீகாரி 2,000 ரூபாய் வரி கட்டினால் தமிழன் 13 ஆயிரம் ரூபாய் வரிகட்டுகிறான்" என்னு கூறியுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

Also Read: "உ.பி, குஜராத்தை விட தமிழ்நாடு பல மடங்கு உயரத்தில் இருக்கிறது" - FREEBIES சர்ச்சைக்கு ஜெயரஞ்சன் பதிலடி!