Tamilnadu
சிறுமியை கொடூரமாக கொன்ற சிறுத்தை.. ஆடு வைத்து கூண்டோடு பிடித்த வனத்துறை..
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அரக்காடு என்ற பகுதியில் பாலன் என்பவருக்கு சொந்தமான தேயிலைத் தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தில் வடமாநில தொழிலாளா்கள் பலரும் தங்கள் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி, அசாம் மாநிலத்தைச் சோ்ந்த நிஷாந்த் என்ற தொழிலாளியின் 4 வயது மகள் சரிதா தேயிலைத் தோட்டத்தில் இருந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த சிறுத்தை ஒன்று, சிறுமியை கடுமையாக தாக்கியுள்ளது. இதை பலத்த காயமடைந்த சிறுமியை அருகிலிருந்தவர்கள் மீட்டு உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சிறுத்தையை விரைந்து பிடிக்குமாறு அதிகாரிகளுக்கு கோரிக்கையும் வைத்தனர்.
இதையடுத்து முதற்கட்டமாக சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க கடந்த வாரம் வனத்துறையினர் சார்பில் தேயிலை தோட்டங்களில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். அப்போது சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிந்தனர்.
இதையடுத்து அங்குள்ள கிராமப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் இரண்டு கூண்டுகளை வைத்து, அதில் வளர்ப்பு ஆடுகளை கட்டி வைத்து சிறுத்தை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இன்று காலை வனத்துறையினர் கூண்டை ஆய்வு செய்தபோது அங்கு, சிறுத்தை கூண்டில் பிடிபட்டிருந்தது தெரியவந்தது.
தற்போது பிடிபட்ட சிறுத்தையை முதுமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்று அடர்ந்த வனப் பகுதியில் விட முடிவு செய்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறுத்தை பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்து காணப்படுகின்றனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!