Tamilnadu

விமானத்தின் சீட்டிற்கு அடியில் மறைத்து வைக்கப்பட்ட கறுப்பு பார்சல்: ஏர்போர்ட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்!

வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து B.S பங்களா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் பகல் 12:30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானம் மீண்டும் சென்னையில் இருந்து வங்கதேசம் தலைநகர் டாக்காவுக்கு பகல் 2 மணிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும். அதற்காக விமான பணியாளர்கள் விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு விமானத்திற்குள் ஒரு இருக்கை வழக்கத்துக்கு மாறாக உயரமாக தூக்கிக் கொண்டு இருந்தது. அதை சரி செய்ய முயன்ற போது. அதற்கு கீழே ஏதோ ஒரு பொருள் மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். உடனே இருக்கையை எடுத்து பார்த்தபோது, அதற்கு கீழே கறுப்பு கலரில் ஒரு பார்சல் இருந்தது.

இதை அடுத்து விமானநிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மெட்டல் டிடெக்டருடன் விரைந்து வந்து, அந்த கருப்பு பார்சலை சோதனை செய்தனர். அதில் வெடி மருந்து, வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரியவந்தது.

இதையடுத்து அதைதிறந்து பார்த்த போது உள்ளே ஆங்கில் வடிவமான ஒரு தங்க கட்டி இருந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து, தங்க கட்டியை பறிமுதல் செய்து, ஆய்வு செய்தபோது, ஒரு கிலோ 364 கிராம் எடை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 63 லட்சம்.

இதையடுத்து சுங்க அதிகாரிகள் தங்க கட்டியை பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். அதோடு விமானத்துக்குள் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள், விமான பயணிகள் வருகை பகுதியில் உள்ள சிசிடிவி பதிவு காட்சிகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, கடத்தல் ஆசாமிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் பகல் 2 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம்,ஒரு மணி நேரம் தாமதமாக,மாலை 3 மணிக்கு புறப்பட்டு சென்றது. துபாய் சாா்ஜா, குவைத், சிங்கப்பூர், மலேசியா,இலங்கை போன்ற நாடுகளில் இருந்து தான் தங்க கட்டிகள் , சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்படும். ஆனால் தற்போது முதல் முறையாக வங்கதேசத்தில் இருந்து வந்த விமானத்தில் இந்த தங்கம் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: ACTION PLAN, MICRO PLAN: தடுப்பூசி செலுத்துவதில் அடுத்தகட்ட அதிரடியில் தமிழக அரசு; சுகாதார செயலர் தகவல்!