Tamilnadu

“செஸ் போட்டியின் போது வாழைப்பழம் எடுத்து செல்லும் பிரக்ஞானந்தா” : சீக்ரெட் உடைக்கும் பெற்றோர்!

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் ஓபன் பிரிவில் 3 அணிகளும், மகளிர் பிரிவில் 3 அணிகளும் அறிவிக்கப்பட்டு, இன்றைய தினம் 5 வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஓபன் B பிரிவில் ஸ்பெயின் அணியை எதிர்கொண்டு விளையாடி வரும் இந்திய அணியில் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா இடம்பெற்றுள்ளார்.

பிரக்ஞானந்தா மற்றும் இந்திய வீரர் வீராங்கனைகள் ஆட்டத்தை பார்க்க தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களில் இருந்து பார்வையாளர்கள் வந்த வண்ணமே உள்ளனர். இந்நிலையில், தினமும் பிரக்ஞானந்தா தனது போட்டிக்கு தான் செல்லும் போது வாழைப்பழம் எடுத்து செல்வதை வழக்கமாக கொண்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சாதாரண வாழைப்பழம் தானே, பசித்தால் உட்கொள்ள எடுத்து செல்வார் போல என சர்வ சாதாரணமாக இதனை எண்ணி விடாமல், இந்த வாழைப்பழம் தான் பிரக்ஞானந்தாவின் வெற்றியின் சீக்ரெட் என பலர் மனதிற்குள் முணுமுணுத்துகொள்வது ஆச்சரியத்தையும், ஆழ்ந்த யோசனையும் தூண்டிய நிலையில், இதுகுறித்து அவரது பெற்றோரிடம் கேட்டோம்.

அப்போது அவர்கள் கூறியதாவது; பிரக்ஞானந்தா ஒரு பொருளை இருக்கும் இடத்திற்கு சென்று எடுத்து சாப்பிட சற்று கூச்சப்படுவார் என்பதால், அவனுக்கு தினமும் கடைக்கு சென்று இருப்பதிலேயே பெரிய வாழைப்பழம் வாங்கி கொடுத்து அனுப்பி விடுவேன். அவன் பசித்தால் மட்டும் அதனை எடுத்து சாப்பிடுவான்.

மேலும் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும் அரங்கில் போட்டியாளர்கள் உட்கொள்ள வித விதமான உணவு பொருட்கள், அவர்களுக்காகவே தனியாக ஒரு அறையில் வைத்திருக்கும் நிலையில், அதனை உட்கொள்ள பிரக்ஞானந்தா விருப்ப படமாட்டார் எனவும், அதற்காக தான் ஒரு டைரி மில்க் மற்றும் வாழைப்பழத்தை அவரது கையில் கொடுத்து அனுப்புவதாக அவரது தாய் மற்றும் தந்தையர் தெரிவித்தனர். மற்றபடி அவரது போட்டிக்கும், வாழைப்பழத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விளக்கம் அளித்தனர்.

Also Read: சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 3 ஆண்டுகள் தடை.. தேசிய சாம்பியனான தமிழக வீராங்கனைக்கு நேர்ந்த சோகம் !