Tamilnadu

“ஆக்கிரமிப்பு நிலத்துக்கு பதில் மாற்று இடத்தை ஏற்க முடியாது..” : ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் கிராமத்தில் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 35 ஆண்டுகளாக தாங்கள் அனுபவித்து வரும் 31.37 ஏக்கர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு நிலத்தை தங்களுக்கு ஒதுக்கும்படியும், வித்தியாச தொகையும் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வைத்த கோரிக்கையை நிராகரித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. மேலும், நான்கு வாரங்களுக்குள் இடத்தை காலி செய்யும்படி தஞ்சாவூர் வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு ஒதுக்கிய நிலத்திற்கு பதிலாக மாற்று இடம் வழங்க தயாராக இருப்பதாக சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசு நிலத்தை 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமித்து, கட்டிடங்களை எழுப்பிவிட்டு, தற்போது மாற்று இடங்களை வழங்குவதாக பல்கலைக்கழகம் தரப்பு கூறுவதை ஏற்க முடியாது என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சாஸ்தா பல்கலைக்கழகம் சார்பில், அரசு நிலத்துக்கு பதிலாக நிலத்தை மாற்றிக் கொள்ள வகை செய்யும் வகையில் கடந்த மே மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாகவும், அதன்படி மாற்று இடம் வழங்க அனுமதி கோரி அரசுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், அது பொதுவான அரசு உத்தரவு என்றும், இவர்களுக்கு பொருந்தாது என்றும் சாஸ்தா பல்கலைக்கழகம் நீர்நிலைகள் ஆக்கிரமித்து உள்ளது என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், அரசின் புது அரசாணையின் கீழ் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அளித்த விண்ணப்பத்துக்கு மூன்று நாட்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை திங்கட்கிழமை தள்ளிவைத்துள்ளனர்.

Also Read: ஆம்பூர் பிரியாணி திருவிழா விவகாரம்: “மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்படக்கூடாது” - தமிழ்நாடு அரசு அதிரடி!