Tamilnadu

தனியார் பள்ளி உணவுகளை விட அரசு சத்துணவில் தரம் அதிகம் : நீயா நானா நிகழ்ச்சியில் மருத்துவர் நெகிழ்ச்சி !

தனியார் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் 'நீயா நானா' நிகழ்ச்சி பொதுமக்களிடம் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று (ஜூலை 31) நடைபெற்ற இந்த நிகழ்ச்சியானது "lunch box சாப்பாடு நல்லா இல்ல : பிள்ளைகள் vs அம்மாக்கள்" என்ற தலைப்பில் ஒளிபரப்பானது.

இந்த நிகழ்ச்சியில் என்ன சத்தான உணவுகள் கொடுத்தாலும் குழந்தைகள் சாப்பிட அடம்பிடிப்பதாக பெற்றோர்கள் ஒரு பக்கம் புகார் தெரிவிக்க, மறுபக்கம் பெற்றோர்கள் தங்களுக்கு பிடித்தமான உணவுகளை வழங்கவில்லை என்று குழந்தைகளும் புகார் வைத்தனர். இப்படி மாறி மாறி ஒவ்வொருத்தரும் தங்கள் தரப்பு வாதங்களையும் எடுத்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குழந்தைகள் நல மருத்துவர் Dr.அருண்குமார் வந்திருந்தார். அப்போது குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த உணவு வகைகளை பட்டியலிட்டு பெற்றோர்களிடம் கூறினார்.

அந்த பட்டியலில்,

  • வெஜ் பிரியாணி,

  • மீல் மேக்கர் பிரியாணி,

  • கொண்டைக்கடலை புலாவ்,

  • மிளகு முட்டை,

  • தக்காளி மசாலா-முட்டை வறுவல்,

  • புளி சாதம், கீரை சாதம், கறிவேப்பிலை சாதம், சாம்பார் சாதம்,

  • உருளைக்கிழங்கு வறுவல், முட்டை போன்றவை இடம்பெற்றன.

இந்த பட்டியல் எப்படி உள்ளது என்று கேட்ட மருத்துவர், இந்த பட்டியல் தான் தற்போதைய தமிழ்நாடு அரசு, அரசுப்பள்ளிகளில் மதிய உணவாக (சத்துணவு) வழங்கி வருவதாக பெருமையுடன் தெரிவித்தார். மேலும் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் அனைத்து உணவு வகைகளும் அதிகளவு புரத சத்துக்கள் (புரோட்டீன்) கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, கீரை வகைகள் இரும்புசத்து வாய்ந்தவையாகும் என்றும் கூறினார்.

பொதுவாக ஒரு குழந்தைக்கு நாளொன்றுக்கு 30 கிராம் புரோட்டீன்கள் தேவைப்படுகிறது. ஆனால் தமிழ்நாடு அரசு வழங்கி வரும் சத்துணவு வகைகளில் சுமார் 15 - 20 கிராம் வரை புரோடீன்கள் கிடைக்கிறது. நாளொன்றுக்கு கிடைக்க வேண்டியதில் முக்கால் பங்கு ஒரு வேளைக்கே கிடைக்கிறது.

இப்படி நாளொன்றுக்கு ஒரு குழந்தைக்கு தேவையான புரதசத்து, நுண் சத்துகள் நிறைந்த உணவை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. தமிழ்நாடு அரசு அரசுப்பள்ளி மாணவர்கள் மீது கொண்ட அக்கறையினால் சத்துணவு திட்டத்தோடு நிற்காமல், ஒரு படி மேலே போய், காலை உணவும் வழங்குவதற்கான அரசாணையை அண்மையில் வெளியிட்டது.

தமிழ்நாடு அரசின் செயல்கள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டை பெற்று வருகிறது.